சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உட்பட 11 வழித்தடத்தில் தனியார் ரயில் இயக்கும் பணி தீவிரம்: கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம்

By கி.ஜெயப்பிரகாஷ்

சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உட்பட தமிழகத்தில் 11 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்குவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இவற்றில் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது தொடர்பாக பல்வேறு முக்கிய பரிந்துரைகளை விவேக் தேவ்ராய் குழு கடந்த 2015-ம் ஆண்டு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தனியார் மூலம் பயணிகள் ரயிலை இயக்குவது, வருவாயை பெருக்க மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பது உட்பட பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை அறிமுகம் செய்து வருகிறது.

இதன்படி, அடுத்த 5 ஆண்டுக்குள் 150 தனியார் ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதுதொடர்பான வரைவு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. ரூ.22 ஆயிரம் கோடி முதலீட்டில் 100 நகரங்கள் இடையே 150 தனியார் ரயில்கள் இயக்குவதற்கான திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட விவரங்கள், கட்டண நிர்ணயம் போன்றவை அறிவிக்கப்பட் டுள்ளன.

இதில் பெரும்பாலான ரயில்கள் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் உள்ளன. இவற்றில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்க வேண்டும். தற்போது உள்ள யார்டு, ரயில் பெட்டி சுத்தம் செய்யும் இடங்களில் தனியார் ரயில்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களை இயக்கும் நிறுவனம், சந்தை விலைக்கு ஏற்ப தங்கள் விருப்பப்படி கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு சலுகை வழங்கலாம் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதிகபட்சம் 160 கி.மீ. வேகம் வரை இயக்கலாம். 15 நிமிடத்துக்கு மேல் தாமதம் ஆகக் கூடாது என்பது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னையில் இருந்து ஜோத்பூர் (வாராந்திர ரயில்), மும்பை பன்வல் (வாரம் இருமுறை), டெல்லி ஓக்லா, ஹவுரா, செகந்திராபாத், கோவை, தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, பெங்களூரு என தமிழகத்தில் மொத்தம் 11 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்கான டெண்டர் விட்டு, நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளன. சொகுசாகவும், விரைவாகவும் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் மத்தியில் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம். இதனால், மற்ற விரைவு ரயில்கள் சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இத்திட்டம் குறித்து டிஆர்இயு தொழிற்சங்கத்தின் உதவித் தலைவர் இளங்கோவன் கூறும்போது, ‘‘தனியார் ரயில்களைஇயக்குவதால், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. தவிர, தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்தோடு செயல்படும் என்பதால், ரயில் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம்உள்ளது. ரயில்வேயின் வருமானமும் குறையும். ரயில் பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்பதால், ரயில்வே தொழிற்சாலைகளில் பெட்டிகள் தயாரிப்பு பணி முடங்கும். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து அதிக அளவில் தனியார்ரயில்களை இயக்க திட்டமிட்டிருப்பது ஏற்புடையது அல்ல. எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்