அரசுப் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது பொறுப்புகளை தட்டிக்கழிக்க கூடாது: டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசுப் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தனது அரசியல் சாசன பொறுப்புகளை தட்டிக்கழிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த ஏ.கே.ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கடந்த 2014-15, 2016-17 ஆண்டுகளில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு விண்ணப்பித்து ஆரம்பகட்ட மற்றும் பிரதான தேர்வுகளை எழுதினேன். இதையடுத்து, கடந்த 2018 அக்டோபரில் நடந்த நேர்முகத்தேர்விலும் பங்கேற்றேன். அதன்பிறகு என் மீது தொடரப்பட்டிருந்த குற்ற வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.

அந்த வழக்கில் விடுதலையானது தொடர்பான நீதிமன்ற உத்தரவை சமர்ப்பித்து சாதி சான்றிதழை பெற்றுத்தர 2 வாரம் அவகாசம் கோரினேன். அதன்பிறகு விழுப்புரம் வட்டாட்சியர் எனக்கு வழங்கிய ஆதிதிராவிடர் வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழை 2018 நவம்பரில் டிஎன்பிஎஸ்சிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பினேன். அதை டிஎன்பிஎஸ்சி பெற்றுள்ளது. ஆனால் எனது சாதிச் சான்றிதழை நான் உரிய முறையில் ஒப்படைக்கவில்லை எனக்கூறி என்னை சிவில் நீதிபதி பணிக்கு தேர்வு செய்யாமல் நிராகரித்து 2018 டிசம்பரில் உத்தரவிட்டது. எனவே எனக்கு சிவில் நீதிபதி பணி வழங்க டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வி.பாரதிதாசன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, “சாதிச் சான்றிதழை டிஎன்பிஎஸ்சி நிராகரித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது அரசியலமைப்பு சட்டம் அடித்தட்டு மக்களுக்கு வழங்கும் உரிமையில் தலையிடுவதுபோல் ஆகும். காலதாமதத்தை ஒரு காரணமாகக்கூறி இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு அரசுப்பணி வழங்க மறுக்கக்கூடாது என பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சாதாரண காரணத்தைக்கூறி ஒரு சிவில் நீதிபதிக்கு தேர்வானவரின் பெயரை நிராகரித்துள்ளது” என வாதிட்டார்.

அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் வழக்கறிஞர் நிறைமதி ஆஜராகி, “அவர் குறித்த காலத்துக்குள் சாதிச்சான்றிதழை ஒப்படைக்கவில்லை என்பதால் தான் அவருடைய பெயர் நிராகரிக்கப்பட்டது” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சாதிச்சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது மனுதாரரின் தவறு அல்ல. குறிப்பாக எஸ்சி, எஸ்டி பிரிவினர் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் விசாரணை, ஆய்வு என பல்வேறு நடைமுறைகளைக் காரணம் காட்டி அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர்.

அரசுப் பணிக்கான நியமனங்களை வழங்கும் பிரதான ஆணையமாக செயல்படும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், இதுபோன்ற தவறான அணுகுமுறையை கடைபிடிக்கக்கூடாது. பொதுவாக அரசுப்பணிக்கு தேர்வு செய்யும்போது, இதுபோன்ற தொழில்நுட்ப காரணங்களைக் கூறி தகுதியானவர்களை நிராகரிக்கக்கூடாது.

எனவே, மனுதாரருக்கு சிவில் நீதிபதி பணி வழங்க மறுத்த டிஎன்பிஎஸ்சியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு உரிய பணி வழங்குவது தொடர்பான நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்