உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி; அலங்காநல்லூரில் திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்: 700 காளைகள், 855 காளையர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்/ என்.சன்னாசி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று விமரிசையாக நடைபெற்றது. மிக அதிகபட்சமாக 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியின்போது காளைகள் முட்டியதில் 40 வீரர்கள் காயமடைந்தனர். காளை ஒன்று முட்டியதில் பட்டதாரி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போட்டியை கேலரியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரும் மயங்கி விழுந்து இறந்தார்.

சர்வதேச அளவில் கவனம் பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இங்கு நடைபெறும் போட்டியில் பங்கேற்பதை மிகப் பெரிய கவுரவமாக காளைகளின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் கருதுகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன்பு தடை ஏற்பட்டபோது, அதை மீட்டெடுக்க அலங்காநல்லூர் வாடிவாசலில் இருந்துதான் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இந்த ஊர் மக்கள், ‘வாடிவாசல் திறக்கும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்’ என்றஉறுதியுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகியது. அதன் பயனாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்டெடுக்கப்பட்டு தற்போது பல ஊர்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் நேற்று வெகு விமரிசையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. 700 காளைகள், 855 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு இந்த போட்டியை நடத்தியது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியைக் காண அமெரிக்கா, இஸ்ரேல், மலேசியா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், டிஐஜி ஆனி விஜயா,எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் 3,000 போலீஸார் அலங்காநல்லூரில் 3 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

போட்டி தொடங்கியதும், அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் பழனிசாமி சார்பிலும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பிலும் கார்கள் பரிசாக வழங்கப்படும் என விழா குழுவினர் அறிவித்தனர். அதனால், வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளைப் பிடிக்க மாடுபிடி வீரர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இந்த போட்டியில் தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், இலங்கை அரசியல்வாதி செந்தில் தொண்டைமான், டிடிவி.தினகரன், ஜல்லிக்கட்டுப் பேரவை ராஜசேகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் காளைகள் களமிறக்கப்பட்டன. இதில் பெரும்பாலான காளைகள் பிடிபடவில்லை. இதற்கு முன் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய திருச்சி, புதுக்கோட்டை, பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலகாளைகள், அலங்காநல்லூர் போட்டியிலும் அருமையாக விளையாடின. எத்தனை வீரர்கள் சூழ்ந்தாலும், அவர்களை காளைகள் அனாயசமாக எதிர்கொண்டன. சில காளைகள், மாடுபிடி வீரர்களை கொம்புகளால் தூக்கி பந்தாடின.

அதேபோல், மாடுபிடி வீரர்களும், வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வந்த காளைகளை அச்சமின்றி அடக்கினர். வெற்றிபெற்ற வீரர்களுக்கும், காளைகளின்உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், குக்கர்,பட்டுப்புடவை, மின் விசிறி, சைக்கிள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்,டிவி, பாத்திரங்கள் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

2 பேர் மரணம்

போட்டியின்போது காளைகள் முட்டியதில் 40 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சோழவந்தான் பகுதியை சேர்ந்த பி.இ. பட்டதாரி ஸ்ரீதர் (22) என்பவர் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட தன்னுடைய காளையை பிடிக்க மாடுவெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாகவந்த மற்றொருவரின் காளை,ஸ்ரீதரின் வயிற்றில் குத்தியது.படுகாயமடைந்த ஸ்ரீதருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல், கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டைப் பார்த்துக் கொண்டிருந்த செக்கானூரணியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (35) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கார்கள் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரராக ரஞ்சித்குமார் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சான்ட்ரோ காரை முதல்வர் பழனிசாமி பரிசு வழங்க உள்ளார். அவர்,16 காளைகளை ஒரே சுற்றில் பிடித்தார். குலமங்களத்தை சேர்ந்த மார்நாடு என்பவர் வளர்த்த கருப்புஎன்ற காளை 12 மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசை பெற்றது. இந்த காளை உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சான்ட்ரோ காரை சென்னையில் பரிசாக வழங்குகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

6 mins ago

க்ரைம்

12 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்