மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் உரிமமா? காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

காவிரி பாசன மாவட்டங்களில் 5-வது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு உரிமம் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.

வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்கும் நோக்குடன் உள்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 4 முறை ஏலங்கள் நடத்தப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 5-வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,789 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமங்கள் இந்த 5-வது ஏலத்தில் வழங்கப்படவுள்ளன. இவற்றில் 4,064.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்படவிருக்கிறது.

புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் தொடக்கமும் முடிவும் புதுச்சேரியைச் சேர்ந்தவை என்றாலும், இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும். அதுமட்டுமின்றி, இந்தப் பகுதிகள் தான் மீன் வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஏற்கெனவே காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் போதிய மீன்வளம் இல்லாததால், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அந்நாட்டு ராணுவத்தால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. புதிய ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது செயல்படுத்தப்படும் பகுதி மீனவர்களும் இடம்பெயர வேண்டிய அவலநிலை ஏற்படும்.

ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதால், அதையொட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. மேலும் இந்த திட்டத்தின் மூலம் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கொண்டுவர விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால், அது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் இதுவரை வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஓர் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் பகுதியில் 471.19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நான்காவது உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ள பரப்பளவு சுமார் 3,200 சதுர கிலோ மீட்டர் ஆகும். ஆனால், இப்போது 5-வது உரிமம் வழங்கப்பட உள்ள நிலப்பரப்பு 4,064 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவைவிட, 5-வது திட்டத்தின் பரப்பளவு மிகவும் அதிகம் ஆகும். அதேபோல், நாடு முழுவதும் 5-வது ஏலம் மூலம் ஹைட்ரோ கார்பன் உரிமம் வழங்கப்பட உள்ள பரப்பளவில் 20 விழுக்காட்டிற்கும் கூடுதலான பரப்பு காவிரி டெல்டாவில் தான் அமைந்திருக்கிறது. காவிரி டெல்டாவை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற மத்திய அரசு முயல்வதையே இது காட்டுகிறது.

ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் காரணமாக, காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதுமட்டுமின்றி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, நில அதிர்வுகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இத்தகைய சூழலில், தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த முனைவது, தமிழகத்தின் சுற்றுச்சூழலைச் சிதைக்க நடத்தப்படும் தாக்குதல் என்பது மட்டுமின்றி, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும்.

தமிழ்நாட்டில் 3 போகம் விளையும் காவிரிப் பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று பாமக வலியுறுத்தி வருகிறது. உழவர் அமைப்புகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாமல், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து உரிமம் வழங்குவது முறையல்ல. எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 5-வது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு உரிமம் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை அரசு ரத்து செய்யவேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

25 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்