நிர்பயா திட்டத்தின்கீழ் சென்னையில் 2,000 இடங்களில் 6,500 கேமராக்கள் பொருத்த திட்டம்: இடங்களை தேர்வு செய்ய 12 தனிப்படைகள்

By செய்திப்பிரிவு

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நிர்பயா திட்டத்தின்கீழ் சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் 6,500 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடங்களை தேர்வு செய்ய 12 தனிப்படைகளை சென்னை காவல் ஆணையர் அமைத்துள்ளார்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ‘தோழி’ அமைப்பு உருவாக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்து 70 பெண் போலீஸார் இந்த அமைப்புக்காக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் போலீஸார் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களின் வீட்டுக்கே சென்று அவர்களுக்கு மன ரீதியாவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மற்றொரு அம்சமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின் மூலம் ரூ.113 கோடி செலவில் 6,500 கேமராக்களை, சென்னையில் 2 ஆயிரம் முக்கிய இடங்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. கேமராக்களை பொருத்துவதற்கான முதல்கட்ட பணியை சென்னை போலீஸார் தொடங்கி உள்ளனர்.

இதற்காக பெண்கள் அதிகமாக கூடும் இடங்கள், நடமாடும் இடங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதற்காக பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, தியாகராய நகர், பரங்கிமலை, அண்ணாநகர், புளியந்தோப்பு, அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, “சென்னையில் இதுவரை 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தில் மேலும் 6,500 கேமராக்கள் 2 ஆயிரம் இடங்களில் விரைவில் பொருத்தப்பட உள்ளன. இதன்மூலம் குற்றங்கள் மேலும் குறையும்.

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு காவல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 45 அம்மா ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவலன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான பெருநகரமாக சென்னை பெருநகரம் திகழ்கிறது" என்றார்.

- இ.ராமகிருஷ்ணன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்