உள்ளாட்சித் தேர்தலில் பெறப்போகும் வெற்றி நாளைய நல்லாட்சிக்கான முன்னோட்டம் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

மோசடிகளையும் முறைகேடுகளையும் தகர்த்தெறிந்து உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நாம் பெறப்போகும் வெற்றி என்பது நாளைய நல்லாட்சிக்கான முன்னோட்டமாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி நிர்வாகத்தை உருப்படி இல்லாமல் சிதைத்து வைத்திருக்கும் அடிமை அ.தி.மு.க. அரசு, தமிழக மக்களை எதிர்கொள்ளப் பயந்து, தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த உள்ளாட்சித் தேர்தலை, உதிரி உதிரியாக நடத்தி, அப்போதாவது மோசடிகள் செய்து வெற்றி பெற்றுவிட முடியுமா எனத் தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை தனது தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களத்தைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

அதன்படி, டிசம்பர் 27 தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 45ஆயிரத்து 336 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் உத்வேகத்துடனும் கவனத்துடனும் செயல்பட்டு, கிராம மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையினை முறையாக நிறைவேற்றுவதற்குத் துணை நின்றது பற்றிய செய்திகள் தொடர்ச்சியாகக் கழகத் தலைமைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

முதல் கட்டத் தேர்தலில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4ஆயிரத்து 700 கிராம ஊராட்சித் தலைவர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தையும் காவல்துறையையும் தனது கட்டுப்பாட்டில் கைப்பாவையாக வைத்துக்கொண்டு மோசடிகளையும் முறைகேடுகளையும் அத்துமீறல்களையும் அடாவடிகளையும் அரங்கேற்றியும், வாக்குகளை விலைக்கு வாங்கியும் வெற்றி பெற்று விடலாம் என ஆளுந்தரப்பு ஆரம்பம் முதலே திட்டமிட்டு வந்தது.

ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளில் திருவள்ளூர், தேனி எனத் தொடங்கி பல மாவட்டங்களிலும் ஆளுங்கட்சியினர் பல இடங்களில் அத்துமீறல்களில் ஈடுபட்டதை ஊடகங்கள் ஓரளவு அம்பலப்படுத்தின. சமூக வலைத்தளங்களிலும் ஆளுங்கட்சியின் துஷ்பிரயோகங்கள் வெளியாயின. வாக்காளர்கள் செலுத்த வேண்டிய வாக்குகளை ஆளுங்கட்சியின் முகவர்களே நேரடியாகச் செலுத்திய காட்சிகளும், வாக்குச்சீட்டுகளில் வாக்களிப்பதற்கு முன்பே அதில் மை இடப்பட்டிருந்ததையும் காண நேர்ந்த பொதுமக்களே தங்கள் ஜனநாயக உரிமைக்காக ஆவேசக் குரல் கொடுத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

மாநிலத் தேர்தல் ஆணையத்துடனான ஆளுங்கட்சியின் கூட்டணியையும் முறைகேடுகளையும் மீறி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய காரணத்தினால் ஏறத்தாழ 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியின் கடந்த 8 ஆண்டுகால அவல நிலையையும், குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்லை நடத்தாமல் ஒவ்வொரு தெருவையும் சீரழித்த கொடுமையையும் மனதில் கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக நல்ல தீர்ப்பை வழங்கிடுவார்கள் என நம்பிக்கை நிறைந்துள்ளது. தேர்தல் களத்தில் பணியாற்றிய கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் நம்பிக்கை மிகுந்த செய்திகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

நம்பிக்கைதான் ஊக்கம் மிகுந்த முயற்சிகளுக்கும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய வெற்றிகளுக்கும் அடிப்படை. எனினும், சாலையில் பயணிக்கும் போது நாம் என்னதான் சாலை விதிகளைச் சரியாகக் கடைப்பிடித்துச் சென்றாலும் எதிரில் வரும் வாகனம் விதிகளைப் புறக்கணித்து தாறுமாறாகச் செயல்பட்டால் விபத்துகள் நேரிடுவதும், அதில் விதிகளை முறையாகப் பின்பற்றியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதும் உண்டு. விதிகளை மீறிய வாகனமாக ஆளுந்தரப்பு தாறுமாறாக உள்ளாட்சிக் களத்தில் செயல்பட்டுள்ளது. எனவே, நாம் விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதுடன், எதிரில் தாறுமாறாக வருபவர்களின் விதிமீறல்கள் மீதும் கவனம் செலுத்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30 அன்று நடைபெறவிருக்கிறது. அப்போது தி.மு.கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இன்னும் கூடுதலான விழிப்புடன் இருந்து, வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் நமது கூட்டணிக்குச் சேர்த்திட வேண்டிய பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றுள்ள தேர்தல் என்பதால், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களை இடைவிடாது கூர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுக்குப் பிறகு, மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் இருந்த மையத்தின் பாதுகாப்பான அறைக்குள்ளேயே ஆட்கள் நுழைந்த நிகழ்வுகளை மறந்திட முடியாது.

இப்போது நடைபெறுவது மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகின்ற ஊராட்சித் தேர்தல். முன்பைவிட கூடுதல் கண்காணிப்புடன் கழகத்தினர் இருந்திடல் வேண்டும். வாக்குப்பதிவு மையங்களுக்குக் கூடுதலான பாதுகாப்பு அளித்து, வாக்கு எண்ணிக்கை நடுநிலையுடன் முறையாக நடைபெறுவதற்காக கழகத்தின் சட்டத்துறை நீதிமன்றத்தின் துணையை நாடியுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகளைச் செலுத்துகின்றனர். அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒன்றியக் கவுன்சில் உறுப்பினர்கள், மாவட்டக் கவுன்சில் உறுப்பினர்கள் வாயிலாக, ஒன்றிய கவுன்சிலுக்கான தலைவரும், மாவட்டப் பஞ்சாயத்துக்கான தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். நேரடித் தேர்தல் முறையிலேயே தில்லுமுல்லுகளை அரங்கேற்றும் ஆளுந்தரப்பு, மறைமுகத் தேர்தலில் பல மோசடிகளைச் செய்வதற்கு முயன்றிடும். அவற்றை முறியடித்து, முழுமையான அளவில் தி.மு.கழகமும் தோழமைக் கட்சிகளும் வெற்றி பெறுவதற்கு தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

மோசடிகளையும் முறைகேடுகளையும் தகர்த்தெறிந்து உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நாம் பெறப்போகும் வெற்றி என்பது நாளைய நல்லாட்சிக்கான முன்னோட்டமாகும். அதனால் இரண்டாவது கட்டத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை, ஒன்றியக் கவுன்சில்-மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேர்வு என இறுதி வரை கவனம் செலுத்தி, வெற்றியை உறுதி செய்வோம்.

இவ்வாறு தன் கடிதத்தில் எழுதியுள்ளார் ஸ்டாலின்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்