பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைக்க ஆபத்தான கர்ப்பிணிகளை கண்டறிய ‘வாட்ஸ்-அப்’ குழு- கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தில் பிரசவத்தின்போது ஏற்படும் தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைக்க ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ்-அப் குழு மூலமாக, ஆபத்தான கர்ப்பிணிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரசவத்தின்போது ஏற்படும் தாய், சேய் உயிரிழப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால், தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இருப்பினும், கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் இறப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் குறித்த தகவல், அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தெரிந்துகொள்ள கோவை சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர், துணை இயக்குநர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது:

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு, இதய பாதிப்பு, ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறித்த முழு அறிக்கை, வாட்ஸ்-அப் மூலமாக ஆலோசகருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழுவுக்கு, கோவை அரசு மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மருந்துத் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் மனோன்மணி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவரின் ஆலோசனையின்பேரில், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில், ரூ.18,000 முறையாக கிடைக்கிறதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்தவர்கள், அறுவை சிகிச்சை மூலமாக ஏற்கெனவே குழந்தை பெற்றெடுத்தவர்கள், உயரம் குறைவானவர்கள், 30 வயதுக்கு மேல் கருத்தரித்தவர்கள் உள்ளிட்டோரை வகைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 2020 பிப்ரவரி28-ம் தேதி வரை கோவையில் பிரசவம் ஆக உள்ள தாய்மார் களில், ஊரகப் பகுதிகளில் 28 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறத்தில் 20 சதவீதம்பேருக்கும் பிரசவத்தின்போது ஆபத்து ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரச்சினை ஏற்படலாம் என கருதும் தாய்மார்களை, பிரசவ தேதிக்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பிரசவ நேரத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு குறைவு. மேலும், வரும் நாட்களில் தாய், சேய் இறப்பு விகிதமும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்