38 நாட்களாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 38 நாட்களாக முழுக் கொள்ளளவான 120 அடியாக இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடக மாநில அணைகள் நிரம்பின. இதைத் தொடர்ந்து, அவற்றில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 13-ம் தேதி அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அன்று தொடங்கி தற்போது வரை டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், நடப்பாண்டில் முதன்முறையாக கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் அணை நீர்மட்டம் அவ்வப்போது கூடுவதும் குறைவதுமாக இருந்தது. எனினும், செப்டம்பர் 24-ம் தேதி 2-வது முறையும், அக்டோபர் 23-ம் தேதி 3-வது முறையும் மீண்டும் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. அதன் பின்னர் அணை நீர்மட்டம் சில அடிகள் குறைந்தது.

இதனிடையே, காவிரியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால், நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த நவம்பர் 11-ம் தேதி மீண்டும் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து தற்போது வரை 38-வது நாளாக அணை நீர்மட்டம் 120 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, “நடப்பாண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் பரவலாக கனமழை கிடைத்தது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் தொடங்கிய பின்னர் வட கிழக்கு பருவமழையும் கை கொடுத்து வருகிறது. எனவே, அங்கு பாசனத்துக்கு காவிரி நீர் தேவை குறைவாகவே இருக்கிறது.

இந்நிலையில், அணை நிரம்பி இருப்பதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசனத்துக்காக திறக்கப்பட்டு வருகிறது. எனவே, அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதனிடையே, அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 4,843 கனஅடியாக இருந்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்