‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ : சமூக வலைத்தளக்  காணொலியில் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்ற தலைப்பில் தனது முகநூல், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் ‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்ற தலைப்பில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அதில் ஸ்டாலின் பேசிய விவரம் வருமாறு:

குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற புதியச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரான, மக்கள் விரோத, மக்களைப் பேதப்படுத்தி - பிளவுபடுத்தும் பிற்போக்கான சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தி.மு.க. எதிர்த்து வாக்களித்தது. ஆனால், அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. அதனைச் சட்டமாக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

இந்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல்; நாடு முழுவதும் போராட்டங்கள் மக்கள் இயக்கமாகவே நடந்துகொண்டு இருக்கி்றது. தி.மு.க.,வும் தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், இதை எதற்காக எதிர்க்கிறோம் என்றே தெரியாமல், மத்திய அரசு எதைக் கொண்டுவந்தாலும் தி.மு.க. எதிர்க்கும் என்று சிலபேர் வழக்கம்போல் அவதூறு கிளப்புகிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்து, நாம் கேட்கும் எந்தக் கேள்விக்குமே அவர்களால் முறையாக பதில் சொல்ல முடியவில்லையே ஏன்?

ஒரு நாட்டில் வாழ முடியாமல் அகதிகளாக நம்முடைய நாட்டுக்கு வருபவர்களுக்கு, வாழ்வு தரக்கூடிய, உன்னதமான சட்டம் தான் குடியுரிமைச் சட்டம். 1955-ம் வருடம், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு, இந்திய நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை, இப்போது திருத்துவதற்கு அப்படி என்ன அவசியம் வந்தது?

பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல பிரச்சினைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றத்தையும், குமுறலையும் திசைதிருப்புவதற்காகவே, இந்தச் சட்டத் திருத்தத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இதில், அகதிகளாக வரும் எல்லோருக்குமே, குடியுரிமை வழங்கப்படும்னு சொல்லி இருந்தால், நாம் எதிர்க்கப் போவதில்லை. சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களை மட்டும், புறக்கணிக்கின்ற வகையில், ஓரவஞ்சனையான, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற சட்டமாக அதை பா.ஜ.க. மாற்றி உள்ளது. அதற்கு அ.தி.மு.க. பக்கபலமாக இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கிறோம்!

இந்திய அரசியல் சட்டம், இந்த நாட்டு அரசை, மதச்சார்பற்ற அரசு என்று சொல்கிறது. அதன்படி, மத அடிப்படையில், எந்த ஒரு சட்டத்தையும், இங்கே கொண்டு வர முடியாது. ஆனால், பா.ஜ.க. அதைத்தான் செய்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இந்தியாவுக்குள் வரலாம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது.

நாம் கேட்பது; இஸ்லாமியர்களை மட்டும் ஏன் வெறுத்து புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதத்தவரெல்லாம் வரலாம் என்கிறார்கள். அப்படியென்றால், இலங்கைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறாங்க?

இதுதான், ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. இழைக்கின்ற மாபெரும் துரோகம். அதனால்தான் தமிழர்கள் அனைவரும் இந்தச் சட்டத்தை கண்டிப்பாக எதிர்த்தாக வேண்டும் என்று சொல்கிறோம்.

ஈழத் தமிழர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் இலங்கையில் வாழ முடியாமல், தமிழகத்த்தில் வந்து முகாம்களிலும், வெளியிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் குறித்தோ, மனிதர்களுக்குரிய கண்ணியத்தோடு வாழ்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்தோ, மத்திய அரசுக்கு கவலை இல்லை. அதுமட்டுமல்ல; தமிழர்கள் என்றாலே மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. இதனை அ.தி.மு.க. தட்டிக் கேட்க முடியாமல், முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!

மத்திய அரசுக்கு தமிழர்கள் அப்படி என்னதான் துரோகம் பண்ணாங்க என்பதுதான் என்னுடைய கேள்வி.

அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்கிறார்கள். அப்படியென்றால் இலங்கை, அண்டை நாடு இல்லையா?

இலங்கையை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம். ஈழத்தமிழர்கள் மட்டும் வரக்கூடாது என்றால், அவர்களை மத்திய அரசும் அ.தி.மு.க. அரசும் இந்துக்களாக பார்க்கவில்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை மட்டும் குறிவைத்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்கான நோக்கம்; இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிற நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானோ!

முஸ்லிம்களால் துன்புறுத்தப்படுற மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றால், பவுத்த சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் பா.ஜ.க. அரசு கவலைப்படவில்லை?

ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றாலும், அவர்களுடைய சமய நம்பிக்கை இந்து மற்றும் சைவம்தானே! அவர்களைப் புறக்கணித்தால், இந்துத் தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம் என்று நினைப்பதாகத் தானே அர்த்தம்?

தமிழினத்துக்கே விரோதமான இந்தச் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது ஏன் தெரியுமா?

இதை எதிர்த்தால், எடப்பாடியும், அவரது கூட்டாளிகளும் கொள்ளையடிக்க மத்திய பா.ஜ.க. அரசு அனுமதிக்காது. லஞ்ச - லாவண்யத்தை மட்டுமே லட்சியமாக கொண்ட இவர்களது ஆட்சியும் பறிபோக நேரும். அதனால்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையே காவு கொடுத்து, தமிழினத்தை காட்டிக் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுவரை கொலைகார, கொள்ளைக்கார ஆட்சியாக இருந்துவரக் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி, இப்போது தமிழின துரோக ஆட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது.

இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டே வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர்ப்பலியே ஏற்பட்டிருக்க்கிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரவே தயங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம்; சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு இந்தச் சட்டம் உட்பட்டதா என்பதை இந்திய உச்சநீதிமன்றம் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையமே வலியுறுத்தி இருக்கிறது.

யார் சொன்னால் என்ன; நாங்கள் கேட்க மாட்டோம் என்கிற தொனியில் - மக்கள் விரோத, மதச்சார்பின்மையை குழி தோண்டிப் புதைக்கிற இந்தச் சட்டத்தை பிடிவாதமாக அமல்படுத்தி இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அதை அடிபிசகாமல் அடிபணிந்து ஆதரித்திருக்கிறது தமிழ்நாட்டை ஆளும் அடிமை அ.தி.மு.க. அரசு.

ஆனால், தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிராக கொதித்தெழும் தி.மு.கழகம், இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. உரிமையையும், மானத்தையும் உயிராக போற்றிய அண்ணா - கலைஞரின் வழிவந்த இந்த இயக்கமும், அதற்கு தலைமை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினும் அப்படி இருந்து விட மாட்டான்!

தமிழினத்தின் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் தெம்பும், திராணியும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன்தான், தமிழினத்தின் உரிமையைக் காக்க இப்போதும் போராட்டக் களம் காணத் தயாராகி விட்டது திராவிட முன்னேற்றக் கழகம். எப்போதும் இனத்துகான நமது போராட்டம் தொடரும்!

இவ்வாறு அவர் தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்