பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள் அறிக்கையுடன் போராட்டத்தை முடிக்கும் கட்சி' என கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

திமுகவிலிருந்து தாம் விலகுவதாக பழ.கருப்பையா அறிவித்துள்ளார். திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல் உள்ளதாகவும் அதன் போக்கை கடுமையாக விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பல கட்சிகள் மாறிய பழ.கருப்பையா சமீபத்தில் திமுகவில் இருந்தார். இந்நிலையில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துவிட்டு அதிலிருந்து விலகுவதாக பழ.கருப்பையா அறிவித்துள்ளார்.

தமிழக இலக்கிய மேடைகளில், அரசியல் மேடைகளில் விமர்சகராக வலம் வருபவர் பழ.கருப்பையா. அரசியல் கட்டுரைகளை எழுதுவதில் வல்லவர். துக்ளக் முன்னாள் ஆசிரியர் சோ-வின் நெருங்கிய நண்பர்.

திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த பழ.கருப்பையா பின்னர் அதிமுகவில் இணைந்தார். துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு கொடுக்க, எம்எல்ஏ ஆனார். பின்னர் அதிமுகவில் தன்னால் செயல்பட முடியவில்லை என விமர்சித்த அவர் திமுகவில் இணைந்தார். கடுமையாக கருணாநிதியை விமர்சித்த அவர், திமுகவில் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் திமுகவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இந்த வேகம் உதவாது என்றும் அறிக்கை வெளியிட்டு பழ.கருப்பையா விலகியுள்ளார்.

தன்னுடைய விலகல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளதாக பழ.கருப்பையா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பழ.கருப்பையா இன்று வெளியிட்ட அறிக்கையில், “சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் திமுகவில் சேர்வதில் எனக்குத் தயக்கம் இருந்தது. ஒரு பொது விழாவில் கலைஞர் மிகைபடச் சொன்னாரோ என எண்ணும் அளவிற்கு என்னை வலியுறுத்தி அழைத்தார். கலைஞர் மறைந்ததும் திமுகவை விட்டு வெளியேறுவது குறித்து சிந்தித்தேன்.

பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அந்த முடிவு தள்ளிக்கொண்டே போய் விட்டது. கட்சியின் நிகழ்கால நடவடிக்கைகள், சிந்தனைப் பங்குகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும் நேர்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணமே எல்லாம் என்று கருதுகிற தன்மை எல்லாம் என்னிடம் பெரிய மனச் சோர்வை உண்டாக்குகின்றன.

இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில், திமுகவை விட்டு ஒதுங்கிக் கொள்வது என்றும் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து விலகிக் கொள்வது என்றும் முடிவெடுத்தேன். நேரடியாக ஸ்டாலினைப் பார்த்து விடையும் பெற்றேன்.

ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலைப் பொதுவாழ்வின் அங்கமாக ஏற்பது, உட்கட்சிக்குள்ளே கூட விமர்சிக்க முடியாத அளவுக்கு உட்கட்சி விசுவாசம் என்னும் பெயரால் நிலைநாட்டுவது. இவையெல்லாம் எந்த வகையிலும் பொது வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல.

மாநிலங்களைப் பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது, இவையெல்லாம் மொழி, இன உணர்வைச் சிதைக்கின்ற போக்குகள் ஆகும். இதில் உள்ள ஆபத்தை திமுக சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறது என்று என்னால் கருத முடியவில்லை. வெறும் ஒரு நாள் அறிக்கைகளோடு இவை எல்லாம் முடிந்து விடுகின்றவை அல்ல.

கடந்த 50 ஆண்டுகளாக ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது. இது அல்ல மாற்று அரசியல் எனும் கருத்தே என்னுடைய விலகலுக்கான காரணம்” என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்