கார்த்திகை தீபத் திருவிழா: சணல்பை, துணிப்பை கொண்டு வந்தால் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு துணிப்பை, சணல்பை கொண்டு வரும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசளிக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை மகா தீப திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், தங்களது பூஜை சாமான்களை கொண்டு செல்லவும், பிற திண்பண்டங்கள், விளையாட்டு சாமான்களை தங்களது இடங்களுக்கு எடுத்து செல்லவும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தூக்கு பைகளை (பிளாஸ்டிக் கேரிபைகள்) பயன்படுத்தி வந்தனர்.

அவ்வாறு பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிளாஸ்டிக் தூக்கு பைகள்(பிளாஸ்டிக் கேரிப்பைகள்), கொண்டு செல்லும் வழியிலேயே கிழிந்து குப்பையாக மாறி கிரிவலப்பாதையிலும், திருவண்ணாமலையில் பிற இடங்களிலும் குவிந்து மாசு ஏற்படுத்துகின்றன. மேலும், பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து செல்வது உள்ளாட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அரசாணை எண்.84, நாள் 25.06.2018-ன் வாயிலாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை கடந்த ஜனவரி 01 முதல் தடை செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விழா காலத்தில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கவும், பொதுமக்கள் பிளாஸ்டிக் கேரிபைகளுக்கு மாற்றாக துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற தூக்கு பைகளை கார்த்திகை மகா தீப திருவிழாவின் போது பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கார்த்திகை திருவிழாவிற்கு துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற தூக்கு பைகளை எடுத்துவரும் பொதுமக்களுக்கு, குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கும் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் நபர்கள் தெரிவு செய்யப்பட்டு 2 கிராம் தங்க நாணயங்களும், 10 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைக்கும் வண்ணமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை எடுத்து வரும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த 2019 கார்த்திகை தீபத்திருவிழாவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நபருக்கு தலா 2 கிராம் தங்கம் மற்றும் 72 நபருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்க மாசு கட்டுப்பாடு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்து கூப்பன் பெறும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு துணிப்பை வழங்கப்பட இருக்கிறது”.

இவ்வாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்