சுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வாசித்த அறிக்கையில், சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களின் முதன்மையானவை:

1) நடப்பு ஆண்டில் 10 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மேலும், 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 கோடி ரூபாய் செலவில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இருப்பிட வசதிகள் ஏற்படுத்தும் வண்ணம், 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடி ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்படும்.

2) தாம்பரம், திருத்தணி, குடியாத்தம், ராஜபாளையம் மற்றும் விருதாச்சலம் ஆகிய 5 மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் டெங்கு, மூளைக் காய்ச்சல், சாலை விபத்து மற்றும் தற்செயலாக விஷம் அருந்துவது போன்ற அபாயகரமானவற்றிலிருந்து அவர்களை காப்பாற்ற, ராஜபாளையத்தில் 20 படுக்கை வசதி கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், தீவிர சிகிச்சைக்குப் பின் நிலைப்படுத்தப்பட்ட குழந்தைகளை அடுத்த 48 மணி நேரத்திற்கு பராமரிக்கும் 5 படுக்கை வசதி கொண்ட ஸ்டெப் டவுன் வார்டும் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

3) நடப்பு ஆண்டில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில், முதல் கட்டமாக 50 பழைய ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக புதிய ஆம்புலன்ஸ்கள் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்; ஆபத்தான நிலையில் உள்ள இளம் குழந்தைகளுக்கு இளம் சிசு பராமரிப்பு மையம் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது. இவற்றை வலுப்படுத்தும் பொருட்டு, முதல் கட்டமாக 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இளம் சிசு பராமரிப்பு மையங்களுக்கு 10 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் வெண்டிலேட்டர் போன்ற புதிய உபகரணங்கள் வழங்கப்படும்.

4) சென்னை, அடையாறு புற்று நோய் மையம், மாநில உயர்நிலை மையமாகவும், ஒப்புயர்வு மையமாகவும் 120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும். | முழு விவரம்: > அடையார் புற்றுநோய் மையத்தை ரூ.120 கோடியில் வலுப்படுத்துகிறது அரசு

ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்கு...

5) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோய் தடுப்பு சிகிச்சை உட்பட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு வருடத்தில் அனுமதிக்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசே ஏற்கும் வகையில், 10 கோடி ரூபாய் தொகுப்பு நிதி ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்ததற்கு இணங்க, மாநில அரசின் பங்காக 10 கோடி ரூபாயும், காப்பீட்டு தொகையிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கப் பெறும் தொகையிலிருந்து ஒரு பங்கினையும் சேர்த்து ஒரு தொகுப்பு நிதி 2012-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியிலிருந்து, இதுவரை 2,506 பயனாளிகள் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதற்கென 177 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து பயன்பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கணிசமாக உயர்ந்து வருவதால், இந்த தொகுப்பு நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த தொகுப்பு நிதிக்கு கூடுதலாக 25 கோடி ரூபாய் அரசின் பங்காக வழங்கப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு...

6) சர்க்கரை நோயாளிகளின் மூன்று மாத கால சர்க்கரை சராசரி அளவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க HbA1C அனலைசர் கருவியும், நோய் தாக்கம் மற்றும் ரத்த உட்கூறுகளின் அளவை கண்டறிய செல் கவுன்டர் (Cell Counter) கருவியும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் என, 302 அரசு மருத்துவமனைகளுக்கு 9 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

7) நடப்பு ஆண்டில் தொற்றா நோய் தடுப்பு திட்டம், பேறுசார் மற்றும் குழந்தை நலத் திட்டம், நகரும் மருத்துவப் பிரிவு திட்டம் ஆகியவற்றிற்காக கூடுதலாக மருந்துகள் வழங்க 102 கோடியே 51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்; 39 புதிய வட்டங்களில் வட்டத்திற்கு ஒன்று வீதம், 39 வட்டம் சாரா மருத்துவமனைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகளாக 70 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

புதிய மருத்துவக் கல்லூரிகள்:

8) ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்படும்; தென் தமிழகத்தில் ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 50 கோடி ரூபாய் செலவில், தென் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

முழு உடல் பரிசோதனைத் திட்டங்கள்

9) சென்னை அரசு பொது மருத்துவமனையில்‚ 'அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்‛ அதாவது, Amma Master Health Check-up தொடங்கப்படும்; மகளிருக்கு என்று தனியாக ‚ 'அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை', அதாவது Amma Women Special Master Health Checkup என்ற திட்டமும் தொடங்கப்படும்; மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் கட்டணம் ஏதுமின்றி செய்து கொள்ளும் வகையில் 'அம்மா ஆரோக்கியத் திட்டம்' என்ற ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதில் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணம் ஏதும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படும். | முழு விவரம்: >அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

10) குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய் சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம்; இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம்; குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட 'அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும். இந்த மருந்துகள், சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் செலவிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்