சென்னை புதிய விமான நிலையத்துக்கான இடத்தை விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்: ராமதாஸ் 

By செய்திப்பிரிவு

புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இனியும் தாமதப்படுத்துவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாதகமாகவே அமையும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை புதிய விமான நிலையத்துக்கான இடத்தை விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கைகூடி வருவதாக தோன்றும் நேரத்தில், அவை தொடுவானத்தைப் போன்று விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. சென்னையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான இரண்டாவது விமான நிலையப் பணிகள் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருவது வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 4 பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று 13 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அதற்கான ஏற்பாடுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சென்னை பசுமைவெளி விமான நிலையத்துடன் அறிவிக்கப்பட்ட ஹைதராபாத், பெங்களூர், கொச்சி ஆகிய விமான நிலையங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. விசாகப்பட்டினம் விமான நிலையம் 2022-ம் ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னை புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது மட்டுமின்றி, அது எங்கு அமையும் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

சென்னையில் புதிய விமான நிலையத்திற்கான அறிவிப்பு வெளியாகி 13 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அது குறித்த பல்வேறு யூகங்களும், கணிப்புகளும் பொய்யாகி விட்டன. புதிய விமான நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக பத்தாண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம் சென்னை விமான நிலையம் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார். இவ்வளவுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்னவென்றால், சென்னைக்கான புதிய விமான நிலையம் சென்னையிலிருந்து 40 கி.மீ. முதல் 90 கி.மீ. சுற்றளவில் உள்ள திருப்போரூர், வல்லத்தூர், செய்யார், மதுரமங்கலம், தொடூர், மப்பேடு ஆகிய 6 இடங்களில் ஒன்றில் அமைக்கப்படும் என்று கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்டதுதான்.

அதன் பின்னர் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து பொருத்தமான இடத்தை தேர்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்போரூரில் புதிய விமான நிலையத்தை அமைக்க முடியாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 இடங்களையும் ஆய்வு செய்ய கடந்த 3 மாதங்களாக இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் எவரும் வரவில்லை.

புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இனியும் தாமதப்படுத்துவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாதகமாகவே அமையும். சென்னை விமான நிலையத்தில் இப்போதே கடுமையான நெரிசல் நிலவுகிறது. சென்னை விமான நிலையத்தின் வழியாக ஆண்டுக்கு 2 கோடி முதல் 2.10 கோடி பயணிகள் வரை உலகின் பல நாடுகளுக்கு பயணிக்கின்றனர். 2021-ம் ஆண்டுக்குள் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்பட்டால் சென்னை விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறன் ஆண்டுக்கு 3 கோடியாக உயரும். ஆனால், இந்த விரிவாக்கத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பயணிகள் பெருக்கத்தை மட்டும்தான் சமாளிக்க முடியும் என்பதால், அடுத்த 7 ஆண்டுகளுக்குள் இரண்டாவது விமான நிலையத்தை கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசரம்; அவசியமாகும்.

சென்னைக்கு அருகில் அமைக்கப்படவிருக்கும் புதிய விமான நிலையத்திற்கு 2,500 முதல் 3,500 ஏக்கர் வரை நிலம் தேவைப்படும். அதில் அரசு நிலம் தவிர மீதமுள்ள தனியார் நிலத்தைக் கையகப்படுத்துவதே பெரும் பணியாகும். அதன்பின்னர் திட்ட வரைபடம் தயாரித்து, கட்டுமானப் பணிகளை முடிப்பது என்பது இமாலயப் பணியாகும். இந்த அனைத்து பணிகளையும் முடிக்க குறைந்தது 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். இப்போதே பணிகளைத் தொடங்கினால் மட்டும் தான் குறித்த காலத்தில் சென்னைக்கான புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

எனவே, முதல் கட்டமாக புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான இடத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உடனடியாக தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் திட்ட அறிக்கை தயாரிப்பு முதல் கட்டுமான பணிகள் வரை அனைத்தையும் கால அட்டவணை வகுத்து அதன்படி செய்து முடிக்க வேண்டும். இப்பணிகளை விரைவுபடுத்தவும், ஒருங்கிணைக்கவும் மத்திய, மாநில அரசுகள், விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவையும் ஏற்படுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

16 mins ago

சுற்றுச்சூழல்

18 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

51 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

58 mins ago

மேலும்