சிலை கடத்தல் தொடர்பாக கடந்த ஓராண்டில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்? - பொன் மாணிக்கவேல் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

By செய்திப்பிரிவு

சிலை கடத்தல் தொடர்பாக கடந்த ஓராண்டில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவிட் டபடி தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வில்லை எனக் கூறி சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி யாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, ‘‘சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ அதன் அடிப்படையில்தான் சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இதுவரை ரூ.31 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. ஆனால் இதுவரை சிறப்பு அதிகாரி ஒரு வழக்கில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை’’ என்றார்.

விலை நிர்ணயம் செய்ய முடியாது

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், ‘‘சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அறிக்கையை கூடுதல் டிஜிபியிடம் தர வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே தவிர, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கக் கூடாது என எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தமிழகம் பழமையும், கலாச் சாரமும் மிக்க தெய்வீக பூமி. இங்குள்ள புராதானமிக்க கோயில் சிலைகள், மரகத லிங்கங்களின் மதிப்பை விலை நிர்ணயம் செய்துவிட முடியாது.

இந்த புண்ணிய பூமியில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க வேண்டும், பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இத்துறையில் அனுபவமிக்க பொன் மாணிக்க வேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தோம். இந்த நீதிமன்றமே சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து உத்தரவிட்ட நிலை யில், அரசு எதற்காக எஸ்பி தலைமையில் தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

அப்போது பொன் மாணிக்க வேல் தரப்பில் வழக்கறிஞர் வி.செல்வராஜ் ஆஜராகி வாதிடுகை யில், ‘‘உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்க வேல் தனது பணியைத் தொடங்கவே 6 மாதங்களாகி விட்டன. அவர் தனது பணியை செய்வதற்கு அரசும், போலீஸ் உயர் அதிகாரிகளும்தான் இடை யூறு செய்தனர்.

160 வழக்குகள்

உயர் நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை. 160 வழக்குகள் இன்னும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை. இதில் 31 வழக்குகளின் புலன்விசாரணை கோப்புகள் மாயமாகிவிட்டன. அவற்றை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்த புராதானமிக்க விலை மதிப்பில்லாத ஒரிஜினல் மயில் சிலை திருடப்பட்டு, போலி சிலை வைக்கப்பட்டது. இந்த விஷயம் வெளியே வந்ததும் மீண்டும் ஒரிஜினல் சிலையை வைத்துள்ளனர். சிறப்பு அதிகாரிக்கு தமிழக அரசு அதிகாரிகள் எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை’’ என்றார்.

இதேபோல அரசு ப்ளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள் யானை ராஜேந்திரன், ஜி.எஸ்.மணி உள்ளிட்டோரும் ஆஜராகி வாதிட்டனர். வழக்கு விசாரணைக்கு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலும் ஆஜராகியிருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட ஓராண்டு காலத்தில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும், அவரது தரப்பில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுபோல இந்த சிறப்பு பிரிவுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகளின் ஊதியம் நீங்கலாக தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு மற்றும் இதர வசதிகளை செய்து கொடுத்துள்ளது என்பது குறித்து அரசு தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்