உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஆராய்ச்சி செய்வது யாருக்கும் எந்த நன்மையையும் பயக்காது : ராமதாஸ் கருத்து

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதங்கள் வெறுப்பை விதைக்கவே பயன்படும். எனவே, விவாதங்களைத் தவிர்த்து, தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த 3 அமைப்புகள் பகிர்ந்து கொள்ளலாம் என்று 2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது என்றும், அந்த நிலம் முழுமையாக இந்துக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில் இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்கு ஏற்ற, முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும்; இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு தாங்கள் வந்தது எப்படி? என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் விரிவாக விளக்கியுள்ளனர். தொல்லியல் துறை தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமின்றி, இந்துக்களின் நம்பிக்கைகளையும் கருத்தில் கொண்டு தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதிகளே கூறியுள்ளனர்.

இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஆராய்ச்சி செய்வது யாருக்கும், எந்த நன்மையையும் பயக்காது என்பது தான் உண்மை. அதேநேரத்தில் இந்தத் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல. யாருக்கும் தோல்வியும் அல்ல.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையிலான நில உரிமை குறித்த வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், அது அவர்களுக்கு இடையிலான உறவை எந்த வகையிலும் எப்படி பாதிக்காதோ, அதேபோல் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவுகளை எந்த வகையிலும் பாதித்துவிடக் கூடாது. மாறாக, இரு மதங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான கருவியாகவே பார்க்கப்பட வேண்டும்.

அயோத்தி நிலம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், இந்தத் தீர்ப்பு தங்களுக்கு மனநிறைவு அளிக்காவிட்டாலும் அதை தாங்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளன. இது மிகவும் ஆரோக்கியமான, முதிர்ச்சியான அணுகுமுறை ஆகும்.

இது பரஸ்பர நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதங்கள் வெறுப்பை விதைக்கவே பயன்படும். எனவே, விவாதங்களை தவிர்த்து, தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை குறித்த காலக்கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதேபோல், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு ஏற்ற, முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை வழங்கவும் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த நிலத்தை தேர்வு செய்யும் விஷயத்தில் இந்த வழக்கை தொடர்ந்த இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

26 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்