5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தர மதிப்பீட்டு தேர்வாக நடைபெறும்: தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சி.பிரதாப்

சென்னை

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்படாததால் பல் வேறு குழப்பங்கள் நிலவின. இந்நிலையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு முப்பருவக்கல்வி முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் சேதுராமவர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாண வர்களுக்கு இனி கல்வியாண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத் தப்பட உள்ளது. இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப் படும். இந்தக்குழு 5, 8-ம் பொதுத் தேர்வு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து வசதி

பொதுத்தேர்வு எழுதும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீட்டர் தொலைவிலும் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம். பொதுத் தேர்வு தற்போதுள்ள வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு அடிப் படையில் நடத்தப்படும். அதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கல்வி தொடர்பான வளரறி மதிப்பீடு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும்.

5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் தொடர்பான அடிப்படை கருத்துகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகளை சோதிக்கும் வகையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 8-ம் வகுப்புக்கு அனைத்து பாடங்களுக்கும் முப்பருவ அடிப்படை கருத்துகள் மற்றும் பயிற்சிகளை சோதித்தறியும் வகையில் நடைபெறும். பொதுத் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகள் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப் பப்படும். மாவட்ட தேர்வுக்குழு அதை பிரதி எடுத்து பள்ளிகளுக்கு பிரித்து தரவேண்டும்.

இதுதவிர விடைத்தாள்கள் குறுவளமைய அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும். திருத்தப் பட்ட விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முப்பருவக்கல்வி முறை 5, 8-ம் வகுப்புகளுக்கு நீக்கப்படவில்லை. அதற்கு மாறாக கல்வியாண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை சோதிக்கும் வகையில் இருக்கும். அடுத்தகட்ட வகுப்புகளுக்கு செல்வதற்கான தர மதிப்பீடு தேர்வாகவே அவற்றை கருத வேண்டும்.

பொதுத்தேர்வு வினாத்தாளில் முந்தைய வகுப்புகளில் உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கூட கேள்விகள் இடம்பெறக்கூடும். அதேநேரம் தேர்வு வடிவ முறை எளிதாகவே இருக்கும். இதற்கான மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும். ஆண்டு இறுதி யில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படும்’’என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்