ஒருமாத காலமாகியும் கண்டுபிடிக்கப்படாத 110 மீனவர்கள்: முதல்வர் தலையிட கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை

மீனவர்கள் 110 பேர் ஒருமாத காலமாக காணாமல் போயிருப்பது குறித்து உடனடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (அக்.30) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமல் அவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மத்திய - மாநில அரசுகளின் தவறான கொள்கைகளின் காரணமாகவும், இயற்கை சீற்றத்தினால் ஏற்படுகிற பாதிப்புகளினாலும் வாழ்வா, சாவா என்கிற அடிப்படையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழக மீனவர்கள் இருக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 110 மீனவர்கள் ஏழு படகுகளில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இதுவரை அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இவர்கள் தூத்தூர், வல்லவிளை, ரமாந்துறை, பூத்துறை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

புயல் அறிவிப்பைக் கேள்விப்பட்டதும் 300-க்கும் மேற்பட்ட படகுகள் குஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவுகளில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் ஒதுங்குகிற நிலை ஏற்பட்டது. இவர்களை எந்த மாநில அரசும் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசும் இவர்கள் பிரச்சினையில் இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை.

கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடந்த ஒருமாத காலமாக வீடு திரும்பாத நிலையில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடுவதற்கு மாநில அரசும் முற்படவில்லை, மத்திய அரசும் இதுகுறித்து அக்கறை காட்டவில்லை. இவர்கள் உண்ண உணவில்லாமல், பட்டினியால் வாடிக் கொண்டிருப்பது குறித்து மத்திய - மாநில அரசுகள் கவலைப்படாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பலமுறை கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், இப்பிரச்சினையில் தீர்வு காண முன்வராதது மிகுந்த வேதனையைத் தருகிறது.

எனவே, தமிழக மீனவர்கள் 110 பேர் ஒருமாத காலமாக காணாமல் போயிருப்பது குறித்து உடனடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்