மாநகர பேருந்துகளில் கட்டண உயர்வு, சீரான இயக்கம் இல்லாததால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது: மெட்ரோ ரயில் கட்டண சலுகையால் மேலும் சரிய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை

பேருந்து கட்டண உயர்வு மற்றும் சீரான பேருந்துகள் இயக்கம் இல்லாததால் சென்னையில் மாநகரப் பேருந்துகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 42 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக குறைந்துள்ளது. இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகையை அறிவித்துள்ளதால், பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 3,300-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தினமும் சராசரியாக 42 லட்சம் பேர் பயணம் செய்தனர். இதற்கிடையே, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரியில் அரசு பேருந்துகளின் கட்டணத்தை மாற்றிஅமைத்தது. சுமார் 50 சதவீதம்வரையில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்சமாக ரூ.24, விரைவு பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.36, சொகுசு பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.48 என வசூலிக்கப்படுகிறது.

இதனால், மாநகரப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 30 சதவீத பயணிகள் ரயில்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் சொந்த வாகனங்களுக்கு மாறிவிட்டனர்.

30 லட்சமாக குறைவு

அரசுப் பேருந்துகளின் கட்டணஉயர்வுக்குப் பிறகு, சென்னையில் சாதாரண கட்டண பேருந்துகளைவிட, விரைவு மற்றும் சொகுசுபேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகின்றன. மேலும், சீரான பேருந்துகள் இயக்கம் இல்லாததால் சிலநேரங்களில் ஒரே வழித்தடத்தில் ஒரே நேரத்தில் 4 பேருந்துகள் வரிசையாக காலியாகவே செல்கின்றன. இதுபோன்ற குளறுபடிகளால் மாநகரப் பேருந்துகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 42 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக குறைந்துவிட்டது.

இந்நிலையில், இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீதகட்டண சலுகை என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், மாநகரப் பேருந்து களின் பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக மாநகரப் பேருந்துகளின் நடத்துநர்கள் சிலர் கூறும்போது, ‘‘பேருந்து கட்டணம் உயர்வுக்குப் பிறகு அலுவலக நேரங்களிலேயே 40 சதவீதம் பேர்தான் பயணம் செய்து வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் பேருந்துகள் காலியாகவே செல்கின்றன. இதனால், எரிபொருள் செலவுதான் அதிகமாகிறது. எனவே, சொகுசு கட்டண பேருந்துகளை நீக்கிவிட்டு, அதிக அளவில் சாதாரண கட்டண பேருந்துகளை இயக்கினாலேயே மக்கள் மீண்டும் மாநகர பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்வார்கள்’’ என்றனர்.

47 ஆண்டு கால நடைமுறை

இதுதொடர்பாக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சந்திரன் கூறும்போது, ‘‘அரசுப் பேருந்துகளுக்கான மொத்த இயக்க நேரம், எத்தனை டிரிப் செல்வது, ஒரு டிரிப் இடைவெளி என்பன உள்ளிட்ட விதிமுறைகள் கடந்த 1972-ம்ஆண்டு உருவாக்கப்பட்டன. அதன்பிறகு, தற்போது வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துவிட்டது.

ஆனால், பேருந்து இயக்க நேரத்தை மட்டும் இன்னும் மாற்றியமைக்கவில்லை. குறித்த நேரத்துக்குள் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பேருந்து இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், சீரான பேருந்துகள் இயக்கத்தில் குளறுபடி நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றி மக்களுக்கு உடனுக்குடன் மாநகரப் பேருந்து வசதிகள் சீராக கிடைக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகாரிகள் விளக்கம்

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கூறியதாவது: பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. பழைய பேருந்துகளை சொகுசு கட்டணத்தில் இயக்கியதால், இச்செயல்பாட்டை பயணிகள் விரும்பவில்லை. இந்நிலையில், கடந்தசில மாதங்களாக புதிய மாநகரப்பேருந்துகளை இயக்கி வருகிறோம். இதனால், சுமார் ஒரு லட்சம்பயணிகள் மீண்டும் மாநகரப்பேருந்துகளுக்கு திரும்பியுள்ளனர். மேலும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் எடுக்கும். இவ்வாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்