முரசொலி அலுவலகம் இடம் பஞ்சமி நிலம் என நான் கூறினேனா? - வைகோ விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை

முரசொலி அலுவலகம் இடம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து திசை திருப்பும் முயற்சி என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (அக்.24) வெளியிட்ட அறிக்கையில், "பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நான் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார்.

அப்போதைய சூழ்நிலையில் நான் அதுபோன்று கருத்து தெரிவித்து இருக்கலாம். ஆனால் அக்கருத்து தவறானது என்பதை பின்னர் உணர்ந்தேன். தற்போது இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டு இருப்பதால் திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மிகத்தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். முரசொலி அலுவலக இடம் பற்றிய அரசுப் பதிவு ஆவணங்களை வெளியிட்டது மட்டுமின்றி, அது பஞ்சமி நிலம் தான் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் முரசொலி இடம் குறித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்சினைகளை திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவந்து, காவிரி தீரத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சி, தென் மாவட்டங்களுக்கு பேரபாயமாக கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமித்து வைக்கும் திட்டம், தேனி மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நியூட்ரினோ ஆய்வகம், மக்கள் எதிர்ப்புகளை மீறி சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டி காவிரி நீரைத் தடுக்க முயற்சி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாநில உரிமைகளைப் பறித்து சமூக நீதிக்கு புதைகுழி தோண்டும் திட்டம்.

இதுபோன்ற மத்திய அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக திமுக மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள்.

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணையாக இருப்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டும் மு.க.ஸ்டாலின் முயற்சியை எவராலும் தடுத்துவிட முடியாது," என வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்