புதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி

தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை புதுச்சேரி ரேஷனில் தரப்படாத சூழலே உருவாகியுள்ளது. பண்டிகை காலங்களில் குறைந்த விலையில் பொருட்கள் தரப்படும் பஜார் அமைக்காதது, கட்டிடத் தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் பரிசுக் கூப்பன் தராதது மற்றும் ஏழைகளுக்கு இலவசத் துணி தராதது உள்ளிட்டவற்றால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை தருவது வழக்கம். கடந்த 2017-ல் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தீபாவளிப் பரிசு காலதாமதமாகத் தரப்பட்டது. தீபாவளி முடிந்த பிறகும் ரேஷன் கடைகளில் தரப்பட்டன. கடந்த 2018-ல் தீபாவளிப் பரிசு தர அரசு, கோப்பு தயாரித்தது. ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு சென்றபோது, ஏற்கெனவே தீபாவளி பண்டிகைக்குத் தரப்பட்ட சர்க்கரைக்கு உரிய பாக்கியை செலுத்திய பிறகு தரலாம் என்று தெரிவித்தார். இதனால் தீபாவளிப் பரிசு கடந்த ஆண்டு தரப்படவில்லை.

புதுச்சேரி அரசுக்கே அதிகாரம் என்ற நீதிமன்றத் தீர்ப்பால் இம்முறை தீபாவளிப் பரிசு கிடைக்கும் என மக்கள் நினைத்திருந்தனர். தற்போது காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால் இம்முறை தீபாவளிப் பரிசு கிடைக்க வாய்ப்பில்லாத சூழலே நிலவுகிறது. அத்துடன் ரேஷனில் அரிசியும் தரப்படவில்லை. அதற்கான தொகையும் வங்கிக் கணக்கில் வைக்கப்படவில்லை.

குறைந்த விலையில் பொருட்களும் கிடைக்காத சூழல்

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பு நிறுவனங்களின் மூலம் சந்தை விலையை விட குறைவான விலைக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் பட்டாசு விற்பனையை புதுச்சேரி அரசு செய்து வந்தது. இம்முறை தீபாவளி பஜார்களும் இல்லை என்று நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"பண்டிகை காலங்களில் சந்தை விலையை விட குறைவாக விற்பனை செய்வது வழக்கம். இம்முறை அதுதொடர்பான அறிவிப்பே அரசு வெளியிடவில்லை" என்கின்றனர்.

தொழிலாளர்கள் வேதனை

கட்டடத் தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், "நலவாரியத்தின் சார்பில் தீபாவளிக்கு இலவசப் பரிசுக் கூப்பன் வழங்குவார்கள். தீபாவளி சமயத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பால் தரப்படவில்லை" என்கின்றனர். அதேபோல் இலவசத் துணிகளும் தாழ்த்தப்பட்டோருக்கு தீபாவளியன்று கிடைப்பதில் சந்தேகமே ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "தேர்தல் விதிகள் அமலில் இருந்தாலும் வழக்கமான நடைமுறையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்ற விதிமுறை உள்ளது. அதே நேரத்தில் தீபாவளிப் பரிசு தர எந்த தொடக்க நடவடிக்கையும் அரசுத் தரப்பில் எடுக்கப்படவில்லை. இனி கோப்பு தயாரித்தாலும் அனுமதி பெற்று சர்க்கரை கொள்முதல் செய்து தீபாவளிக்கு முன்பாக விநியோகிப்பது கடினம். தீபாவளி பஜார் தொடர்பாக பணிகள் ஏதும் நடைபெறவில்லை" என்றனர்.

இதனால் தீபாவளிப் பரிசு இந்த ஆண்டும் ரேஷனில் மக்களுக்குக் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், "தீபாவளியை முன்னிட்டு தரமான பொருட்கள், குறைந்த விலையில் கிடைக்க அரசு தீபாவளி பஜார் திறக்கும். மேலும் இலவசமாக அரிசி, சர்க்கரை, துணி ஆகியவற்றையும் வழங்கும். ஆனால் இந்த ஆண்டு இவை எதுவும் செய்யவில்லை. எனவே அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ரூ.6 ஆயிரத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.

செ.ஞானபிரகாஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்