சீமானின் பேச்சு ஏழு தமிழர்கள் விடுதலைக்குத் தடையாக இருக்கும்: கி.வீரமணி பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை

ஏழு தமிழர்களும் இன்னும் வெளியே வரவில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட சீமான் பேச்சு பயன்படும் என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசினார். "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார்.

விடுதலைப் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்று பொருள்படும்படி சீமான் பேசியதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தி.க.தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

தமிழர்களின் தாய் நிலத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டுள்ளார் என்று சீமான் பேசியிருப்பது பற்றி?

அது எந்த அளவிற்கு, அந்தக் காலகட்டத்தில், சொன்னவருக்கும் அந்த அமைப்பிற்கும் சம்பந்தம் உண்டு என்ற கேள்வியைக் கேட்டால், சொன்ன வார்த்தைகளே தேவையில்லாத வார்த்தைகள் மட்டுமல்ல, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளப் பேசுகிறார்கள் என்றுதான் கருதவேண்டும்.

ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று விடுதலைப் புலிகள் சொல்லவில்லை. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள், உண்மையாக விடுதலைப் புலிகளோடு பழகியவர்கள் அல்ல. விடுதலைப் புலிகளோடு படம் எடுத்துக்கொண்டு, அரசியல் நடத்தக் கூடியவர்கள். அதற்குமேல் சொல்லவேண்டிய அவசியமில்லை.

எனவே, மனிதநேய அடிப்படையில் பார்க்கும்போது, எந்த ஒரு தலைவரையும் கொல்லுவது என்பது அவருடைய கருத்தை வெல்வதாகாது. ஆகவே, நாங்கள்தான் கொன்றோம் என்று சொல்லலாமா? இவருக்கும், அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இது அவருக்குக் களங்கம் என்பதைவிட, விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுடைய எழுச்சிக்கும் இது மிகப்பெரிய பின்வாங்கல். ஈழத் தமிழர்களுடைய எழுச்சிக்கு மட்டும் இது பின்வாங்கல் அல்ல. ஏழு தமிழர்கள் விடுதலையாக வேண்டும். எங்களுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை, நாங்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் ஏழு பேருக்கு, சீமான் பேச்சு எந்த அளவிற்கு உதவும்?

தேவையற்ற இதுபோன்ற பேச்சுகளை சீமான் பேசி, அதன்மூலமாக தான் பெரிய தலைவராக வேண்டும் என்று நினைக்கக்கூடாது. தமிழ்நாட்டில் தலைவராகலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால், இதுபோன்ற குறுக்கு வழியில், பரபரப்புக்காக பேசுவது தேவையற்றது. ஈழத் தமிழர்களுடைய வாழ்வு மீண்டும் மலரவேண்டிய ஒன்றாகும்.

ஏழு தமிழர்களும் இன்னும் வெளியே வரவில்லை. குற்றமற்றவர்கள் அவர்கள் என்று எல்லோரும் துடிதுடித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை அப்படியே தலைகீழாக ஆக்குவதற்கு இந்தப் பேச்சு பயன்படுமே தவிர, ஏழு தமிழர்கள் விடுதலைக்குத் தடையாக இருக்குமே தவிர, வேறு எதற்கும் பயன்படப் போவதில்லை. உண்மைக்கும், இவருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப் புலிகளே ஒப்புக்கொள்ளவில்லை. பிரபாகரன்கூட சில இடங்களில், அது துன்பியல் சம்பவம் என்றுதான் ராஜீவ் கொலையைப்பற்றி பேசியிருக்கிறாரே?

நாங்கள்தான் செய்தோம் என்று பிரபாகரன் சொல்லியிருக்கிறாரா? இல்லையே. பிறகு ஏன் தேவையில்லாமல், யாரோ சம்பந்தமில்லாமல், விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

அவருடைய உண்மையான எண்ணம் என்ன? தமிழ்நாட்டிற்கு தலைமைப் பதவிக்கு எது தேவைப்படுகிறது? பரபரப்பு அரசியலுக்கு எது தேவைப்படுகிறது?

அதனால்தானே அவரைப் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முக்கியமான பிரச்சினையான பொருளாதாரப் பிரச்சினைகள் பின்தங்கிப் போய்விட்டதே. தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்பதற்காகத்தான் சீமான் அப்படி பரபரப்பாகப் பேசியிருக்கிறார்.

ஆகவேதான், அவரைப் புரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஏமாளிகள் அல்ல. யாராவது அவரைப் பற்றி புரிந்துகொள்ளாதவர்களுக்கு அவர் கொடுத்த விளக்கத்தின் மூலமாக அவரை சரியாகப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.

இவ்வாறு வீரமணி பேட்டி அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 secs ago

தமிழகம்

2 mins ago

க்ரைம்

8 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்