சங்ககால சமூகம் பற்றிய ஆதாரம் நமக்குக் கிடைத்துள்ளதே கீழடி அகழாய்வின் வெற்றி: அமர்நாத் ராமகிருஷ்ணன்

By என்.சன்னாசி

மதுரை

சங்ககால சமூகம், நாகரிகம் பற்றிய ஆதாரம் நமக்குக் கிடைத்துள்ளதுதான் கீழடி அகழாய்வின் மிகப்பெரிய வெற்றி என தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.

மதுரை செந்தமிழ் கலைக் கல்லூரியில் இன்று (அக்.14) நடைபெற்ற விழாவில் கீழடி முதலாம், இரண்டாம் கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வுக்காக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது:

கீழடி அகழாய்வு வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட்ட ஆய்வு. அதனால்தான் அது இவ்வளவு பிரபலமாகியிருக்கிறது. கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களைத்தான் நான் முதலில் பாராட்ட வேண்டும். எங்கள் குழுவினர் சென்று கேட்டபோது எந்த மறுப்பும் தெரிவிக்காமல்
பரந்த மனப்பாண்மையுடன் நிலம் கொடுத்தனர்.

தமிழகத்தில் விரிவான அகழாய்வுப் பணிகள் கடந்த 70 ஆண்டு காலமாக நடைபெறவில்லை. அந்த சூழலில்தான் நாமாவது இதை ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்தேன்.

சங்கம் வளர்த்த மதுரையில் இதுவரை குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வு செய்யவேயில்லை என்பதே குறைதான். அதனால்தான் மதுரைக்கு பக்கத்தில் இடம் தேடினோம். நூறு இடங்களில் ஒரு இடம் தேர்வு செய்தோம். அதுதன கீழடி. 110 ஏக்கர் தொல்லியல் மேட்டில் வெறும் 10% ஆய்வே நடந்திருக்கிறது. 10%-க்கே இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு கிடைத்திருக்கிறது.

கீழடிவாசிகள் 40 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு தென்னை மரங்களை வைத்தனர். அதுதான் அந்த மேட்டை காப்பாற்றியுள்ளது. அதனால்தான் அங்கு ஆய்வு செய்ய முடிந்தது.

2014 - 15 காலகட்டத்தில் முதல் ஆய்வுக்காக 43 குழிகள் அமைத்து ஆய்வு செய்தோம். ஒரு நகர நாகரிகம் இருந்த அடையாளத்தைக் கண்டுபிடித்தோம்.

சங்க இலக்கியம் மக்கள் சார்ந்த இலக்கியம் அது புராணம் சார்ந்த இலக்கியம். ஆனால், சங்க காலம் முறையாக கணக்கீடு செய்யப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் தமிழர் வரலாற்றைக் கட்டமைத்திருந்திருக்கலாம்.

இன்று கீழடி அதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. முதல் கட்ட ஆய்வில் கீழடி வரலாற்றின் காலம் கி.மு. 300 என நிர்ணயிக்கப்பட்டது. இப்போது 4-ம் கட்ட அகழாய்வுக்குப் பின் சங்க காலம் கி.மு.680 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் வாழ்ந்த மக்கள் சென்னை போன்ற காஸ்மோபாலிட்டன் நகர மக்களாகவே இருந்துள்ளனர். வாங்கும் திறன் படைத்த நகரமாக, செல்வச் செழிப்பில் இருந்த மக்களைக் கொண்ட நகரமாக இருந்துள்ளது.

ஆதாரம் இல்லாவிட்டால் சங்ககால வரலாற்றை கதை என்பார்கள். ஆனால், இப்போது கீழடி அகழாய்வால் நாம் ஆதாரத்துடன் பேசுகிறோம்.
இன்று நமக்குக் கிடைத்துள்ள பானை ஓடுகளில் உள்ள கீறல்கள் வலுவான ஆதாரம். இது பண்டைய தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக இருந்துள்ளது என்பதற்கான அடையாளம். சங்ககாலத்தில் சாமான்ய மக்களும் எழுத்தறிவுடன் இருந்ததற்கான அடையாளம்தான் பானை ஓடுகளில் உள்ள கீறல்கள்.

அழகன்குளம் தான் பாண்டியனின் உண்மையான துறைமுக நகரம். 83, 84-ல் அகழாய்வு செய்திருந்தால் மிகப்பெரிய துறைமுக நகரத்தை கண்டுபிடித்திருப்போம். ஆனால், அந்த வாய்ப்பை இழந்துவிட்டோம். அன்று வெறும் நிலமாக இருந்தது இருந்த தொல்லியல் மேடு இன்று அது வீடுகள் இருக்கும் குடியிருப்புப் பகுதியாகிவிட்டது.

அதனால் அங்கு ஆய்வு செய்வது இப்போது சாத்தியம் இல்லை. ஆதலால் இருக்கும் தொல்லியல் மேடுகளைக் காப்பாற்ற வேண்டும். வரலாற்றின் மிக முக்கியமான ஆதாரம் தொல்லியல் எச்சங்கள்.

கீழடி அகழாய்வைத் தொடர வேண்டும். இன்னும் எங்கெல்லாம் ஆய்வு சாத்தியமோ அங்கெல்லாம் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழரின் வரலாற்றை கட்டமைக்கமுடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

51 mins ago

ஜோதிடம்

26 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்