மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும்: பள்ளி நிர்வாகத்துக்கு கல்வித் துறை அலுவலர்கள் பரிந்துரை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவரை பிரம்பால் அடித்துக் காயப்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளி நிர்வாகத்துக்கு கல்வித் துறை அலுவலர்கள் நேற்று பரிந்துரை செய்துள்ளனர்.

புதுக்கோட்டை பேராங்குளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அசோக் நகரைச் சேர்ந்த சவுபர் சாதிக் மகன் நஜிபுர் ரகுமான் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், ரெக்கார்டு நோட்டு எழுதவில்லை எனக்கூறி, அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அருளானந்தம், மாணவரை நேற்று முன்தினம் பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், மாணவர் நஜிபுர் ரகுமானுக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற நஜிபுர் ரகுமான், ஆசிரியர் தாக்கியது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நஜிபுர் ரகுமானை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில், மாவட்டக் கல்வி அலுவலர் ராகவன் பள்ளியில் நேற்று விசாரணை மேற்கொண்டார்.

பிரம்பால் தாக்கிய அசிரியர் அருளானந்தம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு கல்வித் துறை அலுவலர்கள் பரிந்துரை செய்துள்ளனர். விரைவில் ஆசிரியர் அருளானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ராகவன் கூறியபோது, "அரசுப் பள்ளியைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, ஆசிரியர் அருளானந்தம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு பரிந்துரைக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளித் தாளாளர் வெளியூர் சென்றுள்ளதால், அவர் ஊருக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

2 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

1 hour ago

மேலும்