டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பலி: அதிமுக அரசு மெத்தனம்; மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (அக்.8_ சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், அ.சவுந்தரராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கடலூர், கோவை, சேலம் என இந்நோய் வேகமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 தினங்களுக்கு முன்பு சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரோகித், முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மகாலெட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் பலியாகினர்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நுஷ்ரத் நகரைச் சேர்ந்த மெஹ்ரீன் 8 வயது சிறுமியும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அதேபோல வண்டலூர் அருகே ஓட்டேரி பிரிவைச் சேர்ந்த 14 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ராஜேஷ் என அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கும், சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பதற்குப் பதிலாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இது உண்மையை மூடி மறைப்பதாகும் என சுட்டிக்காட்டுவதுடன், அரசின் இத்தகையை அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.

தீர்மானம் 2

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்கப்போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மின்சாரப் பேருந்துகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த உயர் தொழில்நுட்பங்கள் வரவேற்கத்தக்கது.

ஆனால், மாநில அரசு இந்தப் பேருந்துகளை தனியாரிடம் இருந்து வாடகைக்குப் பெறுவதாகவும், ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் அந்த தனியாரே பார்த்துக் கொள்வார் என்றும், நடத்துநர் மட்டுமே போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அறிவித்துள்ளது. இது தனியார்மயத்திற்கான கால்கோள் விழாதான் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.

அதிமுக அரசு போக்குவரத்துத்துறையை பொதுத்துறையாக நீடிக்கும் முடிவைக் கைவிட்டதையே குறிக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதாரச் செயல்பாட்டுக்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் எந்த முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது என்றும், மின்சாரப் பேருந்துகளை மாநில அரசே இயக்க வேண்டும் என்றும், தொழிலாளர் வேலைவாய்ப்புகளைப் பறிக்கக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

ஆன்மிகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

மேலும்