மக்கள் வரிப்பணம் ரூ.50 லட்சம் வீண்: ஆண்டுக்கணக்கில் மூடிக்கிடக்கும் மேயர் பங்களா

By அ.வேலுச்சாமி

திருச்சி மாநகராட்சி மேயருக்காக கட்டப்பட்ட பங்களா பல ஆண்டுகளாக மூடிக்கிடப்பதால் புல், புதர் மண்டிக் காணப்படுகிறது.

திருச்சி மேயர், துணை மேயருக்காக மாநகராட்சி அலுவலகத்தின் அருகிலேயே 2008-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் 2 பங்களாக்கள் கட்டப்பட்டன. பொதுநிதியிலிருந்து இதற்கான பணத்தை செலவிட்டதால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அப்போதைய மேயர் சாருபாலா தொண்டைமான் (காங்கிரஸ்), துணை மேயர் அன்பழகன் (திமுக) தலைமையிலான நிர்வாகத்தினர் எதிர்ப்புகளை மீறி பங்களாக்களை கட்டி முடித்தனர்.

துணை மேயருக்கான பங்களாவில் அன்பழகன் குடியேறினார். ஆனால், சாருபாலா அவரது அரண்மனையிலேயே வசித்ததால், மேயர் பங்களா காலியாகக் கிடந்தது. அதன்பின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சாருபாலா தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரான சுஜாதா, மாநகராட்சி பங்களாவை முகாம் அலுவலமாக மாற்றினார். சில மாதங்களிலேயே அவரும் பங்களாவிலிருந்து வெளியேறினார்.

2011 உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயா மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட மேயர் பங்களாவில் குடியேறாமல், துணை மேயருக்கான பங்களாவில் குடிபுகுந்தார். எனவே, துணை மேயரான ஆசிக் மீராவுக்கு மேயர் பங்களாவை ஒதுக்கினர். ஆனால், அவர் அதில் குடியேறாமல் சொந்த வீட்டிலேயே வசித்தார்.

இடைப்பட்ட காலத்தில் ஆசிக் மீரா துணை மேயர் பதவியை ராஜினாமா செய்ததால், அரியமங்கலம் கோட்டத் தலைவராக இருந்த ஜெ.சீனிவாசன் புதிய துணை மேயரானார். அவரும் இதுவரை மாநகராட்சி பங்களாவுக்கு குடிவரவில்லை. இதனால் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட மேயர் பங்களா ஆண்டுக்கணக்கில் காலியாகக் கிடக்கிறது. அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் புல், புதர் மண்டிக் காணப்படுகிறது.

இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த மூத்த கவுன்சிலர் மு.வெங்கட்ராஜ் கூறும்போது, “திமுக ஆட்சிக் காலத்தில் வருவாய்த் துறைக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு, அவர்களின் இடத்தைக் கேட்டு வாங்கி மேயர், துணை மேயர் பங்களாக்கள் கட்டப்பட்டன. தற்போது மேயர் பங்களா மற்றும் அமைந்துள்ள இடத்தின் மதிப்பு ரூ.5 கோடியைத் தாண்டும். இப்படிப்பட்ட இடத்தில் என்ன காரணத்தினாலோ குடி வர மறுக்கின்றனர். இதனால் பங்களா வளாகம் புதர் மண்டிக் காணப்படுகிறது. உள்ளே இருக்கும் பொருட்களும் சேதமடைந்து வருகின்றன. மக்கள் வரிப்பணத்தை மாநகராட்சி நிர்வாகம் எப்படி வீணடிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். மேயர், துணை மேயர் இங்கு குடியேற மறுத்தால், மாநகராட்சி ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்காவது இந்த பங்களாவை அளிக்க வேண்டும்” என்றார்.

மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, “மேயர், துணை மேயருக்கு அளிக்கவே அந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மாமன்ற ஒப்புதலின்றி அவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. புல், புதர் மண்டியுள்ள வளாகத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

துணை மேயர் ஜெ.சீனிவாசனிடம் கேட்டபோது, “துணை மேயரான பிறகு எனக்கு அந்த பங்களாவை ஒதுக்கி தரும்படி நான் இதுவரை கேட்கவில்லை. வேறு யாருக்காவது கொடுத்தாலும் அதுபற்றி வருத்தமில்லை. பங்களா பயன்பட்டால் சரி” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்