விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா? - ராமதாஸ்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினராலும், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், வேதனை தருவதாகவும் உள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினராலும், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டு ஆகும்.

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி ஒரு அச்சுறுத்தல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது என்று தெரியவில்லை. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தமிழக அரசு கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புத் தொடர்பான விஷயங்களிலும், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளிலும் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்த போது கூட தமிழீழ ஆதரவாளர்கள் தான் தீவிரமாக குரல் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தின் நலனை பாதுகாப்பதில் ஈழ ஆதரவாளர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பல்வேறு முக்கிய தருணங்களில் உரையாற்றும்போது கூட ‘‘தமிழகம் எங்களின் தந்தை நாடு. அதற்கு எந்த வகையிலும் ஊறு ஏற்படுவதை அனுமதிக்க மாட்டோம்’’ என உறுதிபட தெரிவித்திருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது கற்பனைக்குக் கூட எட்டாத குற்றச்சாட்டை தமிழக அரசு கூறியிருப்பது நியாயமல்ல.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முன்பு இருந்ததைப் போல 152 அடியாக உயர்த்த வேண்டும்; அணையின் பராமரிப்புப் பணிகளுக்கு கேரளம் முட்டுக்கட்டைப் போடுவதைத் தடுக்க மத்தியப் படையை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று தமிழீழ ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தமிழகத்தின் நலனுக்காக ஈழ ஆதரவாளர்கள் போராடிவரும் நிலையில் அவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறியதற்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒருபுறம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தான் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விசாரணை நடத்திவரும் தீர்ப்பாயத்தில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு முன்வைத்த வாதத்தில் தமிழகத்திலுள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகளின் ஆதரவுடன் அகண்ட தமிழீழத்தை அமைக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டு வருகின்றனர் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்தது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழீழ கோரிக்கை இனி எழாமல் முடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் சதிச் செயல்களுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு தெரிந்தே துணை போகிறதோ? என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எனவே, முல்லைப்பெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஆபத்து ஏற்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்