உணவுக்காக காத்திருக்கும் விலங்குகள்!- மழுங்கிப் போகுதா வேட்டைக்குணம்?

By செய்திப்பிரிவு

ஆர்.டி.சிவசங்கர்

வன உயிரினங்களிடம் இரக்கம் காட்டுவதாக கருதிக் கொண்டு உணவு அளிக்கும் சுற்றுலாப் பயணிகளால் விலங்குகளின் வேட்டைக் குணம் மழுங்கி வருவதுடன், அவை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் நீடிக்கிறது என்கின்றனர் சூழல், பிராணிகள் நல ஆர்வலர்கள்.

தமிழகத்தில் 56 சதவீத வனப் பரப்பைக் கொண்டுள்ளது நீலகிரி மாவட்டம்.

பெரும்பாலான பகுதிகள் வனத்தையொட்டியுள்ளதால், இங்கு வசிக்கும் மக்களுக்கு வன விலங்குகளுடன் பரிச்சயம் அதிகம்.
அதேபோல, நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவிலான சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை கண்டதும் ஆர்ப்பரிக்கின்றனர். குறிப்பாக, நெடுஞ்சாலைகள், முதுமலை புலிகள் காப்பகங்களைக் கடந்து செல்லும்போது, விலங்குகளைக் கண்டதும், அவற்றுக்கு உணவு அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களது இரக்கம், விலங்குகளின் உணவு வேட்டை குணத்தை மழுங்கச் செய்து வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் அருகருகே உள்ளன. இந்தக் காப்பகங்களில் புலி, யானை, மான், காட்டெருமை, மயில் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. மேலும், இந்தக் காப்பகங்களின் மத்தியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மூன்று மாநில போக்குவரத்துக்கான முக்கிய சாலை என்பதால், இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து உள்ளது.

தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால், வன விலங்குகள் சாலையைக் கடந்து காப்பகத்தின் மறுபுறத்துக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. சாலையைக் கடக்கும் விலங்குகள் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின.
இதைக் கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விலங்குகள் சாலையைக் கடப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருப்பது, விலங்குகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. குன்னூர்-பர்லியாறு மலைப் பாதையில் உள்ள சாலை அடர்ந்த வனப் பகுதியைக் கடந்து செல்வதால், வன விலங்குகள் சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

உணவு அளிப்பதால் விபரீதம்!

வனத்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், சாலையோரங்களில் உள்ள விலங்குகளுக்கு உணவு அளிப்பதால், அவற்றுக்கு மற்றொரு சிக்கலும் நிலவுகிறது. உணவை உட்கொள்வதற்காக சாலையோரங்களுக்கு வரும் விலங்குகள் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. மேலும், விலங்குகள் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்து சாலையோரங்களில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்த சாலையில் அதிக அளவில் குரங்குகள் சுற்றித் திரியும். இவற்றைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள், அவற்றுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, குன்னூர்-பர்லியாறு சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதுடன், அங்கு அமர்ந்து சாப்பிடவும் செய்கின்றனர். பின்பு, உணவுக் கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் அப்பகுதியிலேயே வீசிச் செல்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் குரங்குகள், உயிரிழக்கும் அபாயத்துக்குத் தள்ளப்படுகின்றன.
மேலும், சில சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களிலிருந்து உணவைத் தூக்கி எறிவதால், அவற்றை உண்ண சாலைக்கு வரும் விலங்குகள், எதிரே வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் நிலவுகிறது.

இதனால், குன்னூர்-பர்லியாறு, கூடலூர்-கக்கநல்லா, உதகை-கூடலூர் சாலைகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், குரங்குகளுக்கு உணவு அளிக்கக் கூடாது என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அந்த சாலையில் அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளனர். வாகனங்களில் அடிபட்டு பல குரங்குகள் ஊனமடைந்துள்ளன. மலைப் பாதையில் ஊனத்துடன் வலம் வரும் குரங்குகள் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.

வனங்களில் அருகேயுள்ள குடியிருப்புகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றை வனத் துறையினர் பிடித்துச் சென்று, வனப் பகுதிகளில் விடுவிக்கின்றனர். ஆனாலும், குரங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிலர் குரங்குகளை தாக்கவும்கூட முற்படுகின்றனர். இந்தக் காரணங்களால் குரங்குகள் ஊனமடைகின்றன. குடியிருப்புகளில் பிடிக்கப்படும் குரங்குகள் வனத்தில் விடப்பட்டாலும், மீண்டும் அவை குடியிருப்புகளைத் தேடி வருகின்றன.

இதுகுறித்து `நெஸ்ட்’ அமைப்பு அறங்காவலர் சிவதாஸ் கூறும்போது, “தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரங்களில் உள்ள வனப் பகுதிகளையொட்டி தினமும் நூற்றுக்கணக்கான குரங்குகள், வாகனங்களில் இருந்து வீசும் உணவுக்காக காத்திருக்கின்றன. வாகனங்களை நோக்கி ஓடும்போது, அவை அடிப்பட்டு, கை, கால்களை இழப்பது தொடர்கதையாகிறது. சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க வேண்டுமென்பதற்காக, சிப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பயணிகளை நோக்கி வீசுகின்றனர்.
அவற்றில், விலங்குகளுக்குப் பிடித்தமான உப்பு நிறைந்திருப்பதால், அவற்றை உண்ண விலங்குகள் சாலைக்கே வந்து விடுகின்றன. மேலும், தற்போது மான், மயில் போன்ற விலங்குகள்கூட பயணிகள் வீசும் உணவுக்காக காத்திருக்கும் அவல நிலையைக் காணமுடிகிறது.

சுற்றுலாப் பயணிகள் விலங்குகளுக்கு உணவளிப்பதால், அவற்றின் இரையைத் தேடும் குணம் மறைந்து வருகிறது. உணவுக்காக காத்திருக்கும் விலங்குகள், வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, சில சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையையும் மீறி செயல்படுகின்றனர். வனத்தையொட்டிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, விலங்குகளுக்கு உணவளிக்கவோ கூடாது என்று எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உணவளிக்கும் நபர்களைக் கண்டறிந்தால், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிலர் வனத் துறையினர் இல்லாத பகுதிகளுக்குச் சென்று, விலங்குகளுக்கு உணவு அளிக்கின்றனர்” என்றனர்.
“மனிதர்களின் சுயநலத்துக்காக விலங்குகளின் இயல்புகளை மாற்ற முயற்சிப்பது மிக வேதனைக்குரியது. காட்டில் வாழ்ந்து, அங்கு கிடைக்கும் உணவுகளையே உண்டு, வாழ்ந்து வரும் விலங்குகளை, வாகனங்களில் இருந்து வீசியெறியும் உணவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும் அளவுக்கு, அவற்றின் இயல்பை மாற்றியமைப்பது நியாயமற்றது. வனத் துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, இதை தவறு என்று எண்ணும் மனப்பக்குவம் சுற்றுலாப் பயணிகளுக்கும் அவசியம்” என்கின்றனர் பிராணிகள் நல ஆர்வலர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

34 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

19 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்