புதிய மோட்டார் வாகனச் சட்டம்; அபராதத்தின் அளவைக் குறைக்க ஆலோசித்து வருகிறோம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்துவதற்கு முன் அபராதத்தின் அளவைக் குறைப்பது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் இந்த மாதம் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலானது. பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராத அடிப்படையில் பல மாநிலங்கள் அப்படியே அபராதத்தை அமல்படுத்தியுள்ளன. இதனால் பல மாநிலங்களில் வாகன ஓட்டிகளை போலீஸார் கடும் சிரமத்துக்குள்ளாக்குகின்றனர்.

ஒடிசா, ஹரியாணா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வாகன ஓட்டிகளிடம், 70 ஆயிரம், 80 ஆயிரம் என வசூலித்தனர். நாகாலாந்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ஓவர் லோடு உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.2 லட்சம் வரை டெல்லி போலீஸார் அபராதம் விதித்தனர். 11,000 ரூபாய் அபராதம் விதித்ததால் நொந்துபோன டெல்லியைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தையே தீயிட்டு எரித்தார்.

ஹெல்மெட் இல்லையா ரூ.1000, ஓவர் ஸ்பீடா ரூ.5000, லைசென்ஸ் இல்லையா ரூ.5000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறாயா ரூ.10,000 என அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை பல மாநிலங்கள் அமல்படுத்தவில்லை என முடிவெடுத்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் இந்தச்சட்டம் அமலானால் அது பொதுமக்களிடையே பலத்த மனக்கசப்பை உருவாக்கும் என அரசு கருதுகிறது. அதனால் 20 நாட்கள் ஆகியும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமலாக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

கேரளா, குஜராத் போன்ற மாநிலங்கள் அபராதத்தைக் குறைத்து அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் மோட்டார் வாகனச் சட்டம் அமலாக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் தற்போது வரை பழைய அபராததத் தொகையே வசூலிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்தின் அளவைக் குறைக்க முதல்வர் ஆலோசித்து வருவதாகவும், இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அரசாணையாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

இந்தியா

29 mins ago

கல்வி

50 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்