இந்தியாவா? 'இந்தி'யாவா? - அமித்ஷா கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை

இந்தியாவா? 'இந்தி'யாவா? என, அமித்ஷாவின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செப்.14) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேறுபாடுகள் நிறைந்த மாநிலங்கள் ஒன்றி இணைந்திருக்கும் இந்த பன்முகத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய வலிமை. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம்.

பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள் முதலே மேற்கொண்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா , "நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம்.

அதுதான் உலகளவில் இந்தியாவுக்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி" எனக் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் 'இரண்டாம் தர குடிமக்களாக்கும்' முயற்சியாகவே தெரிகிறது.

அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே கேட்டவர் திமுகவின் நிறுவனர் அண்ணா. அன்று தொடங்கி இன்று வரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்த் தமிழைக் காத்து, பிற மாநில மொழிகளுக்கும் அரணாக விளங்கி வருகிறது திமுக.

அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்பட வேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், இந்தியாவின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பிரதமர் மோடியும் இதுகுறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், திமுக இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். தமிழ்நாட்டில் உள்ள நட்பு சக்திகள் மட்டுமின்றி, இந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க திமுக தயங்காது.குடிமைப்பணி, ரயில்வே, அஞ்சல்துறை, வங்கிப்பணி என ஒவ்வொன்றாக இந்தியைத் திணிக்க முயற்சித்து, இப்போது இந்தியா என்கிற ஒருமைப்பாடு நிறைந்த நாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில், இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்கிற குரல் ஒலிக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க திமுக தயாராக இருக்கிறது; இது இந்தியா. 'இந்தி'யா அல்ல என எச்சரிக்கிறது," என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்