தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். மேலும் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக் கையை ஏற்று 10-ம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை அமல்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி செய்வதில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது. அப்போது 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத்திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வும் நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

24 மாநிலங்கள் ஆதரவு

இதற்கு நாடு முழுவதும் 24 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த சட்டத்திருத்தத்தை அமல் படுத்த முடிவு செய்து அதற் கான முன்னேற்பாடுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் மேற் கொள்ளப்பட்டன.

இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதை யடுத்து தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித் தார்.

இதனால் இந்த விவகாரத்தில் நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணை:

மத்திய அரசு கொண்டு வந் துள்ள இலவச கட்டாயக்கல்வி சட்டத்திருத்தப்படி பள்ளிக் கல்வியின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு (2019-20) முதல் பொதுத்தேர்வு நடத்த வும், தேர்வுக்கான வழிகாட்டு தல்களை அளிக்கவும் தொடக் கக்கல்வி இயக்குநர் அனுமதி கோரியுள்ளார்.

தேர்ச்சியை நிறுத்தக்கூடாது

இதை பரிசீலனை செய்து 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த தேர் வின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம். இந்த பொதுத்தேர்வு நடத்துவதற்கான முறையான அறிவிப்புகளை வெளியிட்டு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள துறை இயக்குநர்கள், அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அடிப்படை கற்றலிலுள்ள குறை பாட்டை நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு மாற்றி விடுவதால் உயர்நிலை வகுப்பில் மாணவர்கள் திணறுகின்றனர். அடுத்தாண்டு பொதுத்தேர்வை சந்திக்கவுள்ள 9-ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தாமல், ஆரம்ப கல்வி கற்றுத் தரும் சூழல்களே நிலவுகின்றன.

பிரிட்ஜ் கோர்ஸ் உட்பட பல சிறப்பு பயிற்சிகளை வழங்கினா லும் மாணவர்கள் கற்றல் முறையில் முன்னேற்றமில்லை. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர் களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் நடப்பாண்டு முதல் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்படுகிறது. எனினும், முதல் 3 ஆண்டுகள் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுவார்கள். அதன்பின் இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் மறு தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும்’’என்றனர்.

மொழிப்பாடத்துக்கு ஒரே தாள்

இதற்கிடையே, மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப் படுகின்றன. அதன்படி 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட மற்றொரு அரசாணை:

மாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட மொழிப்பாடத் தேர்வுகள் 2 தாள்களாக (தாள்-1, தாள்-2) இல்லாமல் ஒரே தாளாக மாற்றப்பட்டது. அதேபோல், பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறையை பின்பற்ற ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதையேற்று நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வுத்துறைக்கான கூடுதல் வேலைகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்