பேனர், கட்-அவுட் வைக்கும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டேன்: மு.க. ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

திமுகவினர் நிகழ்ச்சிகளில் அனுமதியில்லாமல் பேனர் வைத்தால் அதில் பங்கேற்க மாட்டேன் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடத்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

இதில் ஒரு பேனர் சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ ரவி மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த சுபஸ்ரீ மரணமடைந்தார்.

இந்தச் சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவினரின் பேனர் மற்றும் கட்-அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண்ணின் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கெனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.

பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் - மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைக் கழக, மாவட்டக் கழக, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

இந்தியா

1 min ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்