சூர்யாவின் ‘காப்பான்’ படத்துக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சென்னை,

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜான் சார்லஸ் என்பவர் படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் மனுவில், “கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதி, கதையை பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்திடம் விரிவாகக் கூறினேன். எதிர்காலத்தில் இந்தக் கதையைப் படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், 'சரவெடி' கதையை ‘காப்பான்’ என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். எனவே ‘காப்பான்’ படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது . அப்போது படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் “ 'சரவெடி' படத்தின் கதை வேறு, ‘காப்பான்’ கதை வேறு” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் ஜான் சார்லஸ் என்பவரை எந்தக் காலத்திலும் தான் சந்தித்தது இல்லை. அடையாளம் தெரியாதவர்களிடம் நான் கதை கேட்பதில்லை. 'சரவெடி' படத்தின் கதை வேறு. என்னுடைய கதை வேறு. இரண்டுக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அற்ப நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, எனவே ‘காப்பான்’ படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கே.வி.ஆனந்த் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்