ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர் ராஜினாமா: பாஜக ஆட்சியின் நூறு நாள் சாதனையா? - முத்தரசன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை

ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்வது பாஜக ஆட்சியின் நூறு நாள் சாதனையா என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (செப்.9) வெளியிட்ட அறிக்கையில், "இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக நூறு நாட்கள் சாதனை எனக் கொண்டாடி மகிழ்கின்றது. நூறு நாட்களுக்குள்ளாக எழுபது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகனத் தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழில் தொடர முடியாமல் மூடுவிழா நடத்தியுள்ளன.

முன் எப்போதும் கண்டிராத வேலையின்மை நீடிப்பதுடன் தொழில்கள் மூடல் காரணமாக மேலும் அதிகரித்துள்ளது. வேளாண்மை, தொழில் என அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் திறந்த வெளி சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து, ஆளாக்கிய அன்னையைக் காணவும், அவரது அன்பைப் பெறவும் மகளுக்கு உரிமையின்றி, உரிமை கேட்டு நீதிமன்றம் நாட வேண்டியுள்ளது. எதிரி நாட்டுப் படைகள், இந்தியாவில் அத்துமீறிப் புகுந்து, ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுத்து, இந்திய மண்ணையும், மக்களின் உயிரையும் காக்க வேண்டிய ராணுவ வீரர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர், காஷ்மீரில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியே வந்து விடாமல் தடுத்து நிறுத்தும் பணிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

காஷ்மீரத்து நமது சகோதரர்கள் தேசத்துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சிறைக்காவலில் காரணமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் மிக வசதியான முறையில் மூடி மறைத்துவிட்டு, பாஜக நூறு நாள் விழா எடுத்து, தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது.

இது மட்டுமின்றி, இந்திய அரசுப் பணியில் தேர்ச்சி பெற்று உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி வருபவர்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே ராஜினாமா செய்து வருகின்றனர். டையூ டாமன் செயலாளராகப் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் தனது அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதைக் கண்டித்து, தான் வகிக்கும் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கர்நாடகாவில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா செய்தார். தற்போது கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி மக்கள் மத்தியில் சிறந்த அதிகாரி என போற்றப்பட்ட சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்துள்ளார்.

இதுவரை மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய ஆட்சிக்கு எதிராக, தங்களின் மனசாட்சிக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்துள்ளது சாதாரணமான ஒன்றாகக் கருத இயலாது. வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில், ஆசிரியர்களே, அதிகாரிகளே, வழக்கறிஞர்களே, நீதிபதிகளே ஆட்சிக்கு எதிராக தங்கள் பணிகளைக் கைவிட்டு வெளியேறுங்கள் என காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று அன்று வெளியேறினர்.

இன்று எந்த அரசியல் கட்சித் தலைவரும் அப்படிப்பட்ட அறைகூவலை விடுக்கவில்லை. ஆனால் அதிகாரிகளும், நீதிபதிகளும் தங்களின் மனசாட்சிக்கு அடிபணிந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். மேலும் தொடரும் அபாயநிலை உள்ளது. இதுதான் பாஜக ஆட்சியின் நூறு நாள் சாதனை என்பதனை பாஜக உணர்ந்து தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்