‘தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரி’ : தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

விதை நெல்லை எடுத்து விருந்து சமைத்து களிப்பது போல, தன்னுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பினை ரிசர்வ் வங்கியில் இருப்பிலிருந்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து சமாளித்து, எதிர்கால நிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது மத்திய அரசு என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே,

உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

திருவண்ணாமலை நம்மை, நா தித்திக்கத் தித்திக்க இனிமையாக அழைக்கிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் கிரிவலம் வந்து மலையழகு கண்டு, கார்த்திகைப் பெருநாளில் மகாதீபம் கண்டு பரவசம் பெறுகின்ற அந்தத் திருவண்ணாமலை, திராவிட அரசியல் பேரியக்கமாம் திமுகவின் நெடும்பயணத்திலும் சிறப்பான தனி வரலாறு படைத்த திருநகரமாகும்.
தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஊக்கப்படுத்தி வரும் மக்கள் இயக்கமாகத் திமுக எனும் பேரியக்கம் திகழ்கிறது.

அறக்கட்டளைகள் வாயிலாக கல்வி - மருத்துவம் போன்ற உதவிகள் தொடர்ந்திடும் நிலையில், அரசியல் களத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த உரைவீச்சுகள் முப்பெரும் விழாவில் உடன்பிறப்புகளை ஊக்கப்படுத்தி, உறைவிட்டெழும் போர்வாளாக ஜனநாயகக் களம் காணச் செய்யும்.

எதிரிகளை நாம் தேடிச் செல்வதில்லை. இனத்திற்கும் மொழிக்கும் மக்கள் நலனுக்கும் எதிராக எவரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களையெல்லாம் எதிர்த்துப் போராடி வெல்கின்ற வலிமை திமுகவுக்கே உரியது. இன்றைய அரசியல் களத்தில் எதிரணியில் இருப்பவர்கள் நமக்கு மட்டும் எதிரிகளல்லர். நாட்டு நலத்திற்கும் வளத்திற்கும் எதிரிகளாக இருக்கிறார்கள்.

குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் , குழியும் பறித்தது என்பதுபோல பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் ஏழை - நடுத்தர மக்களின் தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் சீரழித்து, அவர்களின் வாழ்வைக் கீழே தள்ளிய மத்திய பாஜக அரசு, இப்போது பெருந்தொழில் நிறுவனங்களே ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகிற அளவிற்கு பொருளாதாரத்திற்குப் படுகுழி பறித்திருக்கிறது.

விதை நெல்லை எடுத்து விருந்து சமைத்து களிப்பது போல, தன்னுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பினை ரிசர்வ் வங்கியில் இருப்பிலிருந்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து சமாளித்து, எதிர்கால நிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது. மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களால் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

‘தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரி’ போல, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் உடன்பட்டு, முழந்தாளிட்டு அவற்றை நிறைவேற்றுகிறது மாநிலத்தை ஆள்கின்ற அதிமுக அரசு. ‘நீட்’ தேர்வு தொடங்கி, ரேஷன் கார்டு வரை தமிழ்நாட்டின் உரிமைகளையும் நலன்களையும் பறிகொடுத்துவிட்டு, பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு, பகல்கொள்ளையில் பரவசம் கொண்டு, பல நாடுகளுக்கும் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள்.

சுற்றுலாத் துறைக்கு ஓர் அமைச்சர் இருப்பது வழக்கம். இங்கே முதல்வரில் தொடங்கி ஒட்டுமொத்த அமைச்சரவையும் குத்தகை போல சுற்றுலா அமைச்சரவை ஆகியிருக்கிறது.

நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக் கொண்டிருக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயகப் போரினைத் தொடர்ந்து நடத்திடவும், அந்தக் களங்களில் நாம் பெறப்போகும் வெற்றிகளுக்குக் கட்டியம் கூறிடும் வகையில், நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது முப்பெரும்விழா.

கலைஞரின் இனிய உடன்பிறப்புகளே.. முப்பெரும் விழாவில் கூடிடுவோம். பெரியார் - அண்ணா கொள்கை வழி திமுக எனும் பேரியக்கத்தைத் தலைவர் கலைஞர் வகுத்த வழியில் வாழ்நாளெல்லாம் கண்ணெனக் காத்திடுவோம்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்