ஓட்டை, உடைச்சல் பஸ்ஸுக்கு பெயர் ‘சொகுசு’ பேருந்து: பயணிகளின் நரக வேதனை

By ப.முரளிதரன்

சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பு சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த இப்பேருந்துகள் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், ஆரணி, பெரியபாளையம், செங்குன்றம், பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் உள்ள பாரிமுனை, கோயம்பேடு, தி.நகர், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை இப்பேருந்துகள் இணைக்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர்.

அதேசமயம், சொகுசுப் பேருந்துகள் என்ற பெயரில் இயக்கப்படும் இப்பேருந்துகளில் பெரும்பாலானவை பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இதுகுறித்து, திருவள்ளூரை சேர்ந்த பயணிகள் சங்க நிர்வாகி பாஸ்கர் கூறியதாவது:

ஆவடியில் இருந்து ஆரணிக்கு (தடம் எண்.580, வண்டி எண்.ஏவிஐ 0261) என்ற பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சொகுசு (டீலக்ஸ்) பேருந்து என இயக்கப்படும் இந்தப் பேருந்தின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. பேருந்தின் இருக்கைகள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளன. கைப்பிடிகள் மற்றும் இருக்கையின் பின்புறம் ஆகியவை உடைந்து போயுள்ளன.

தானியங்கி கதவுகள் வேலை செய்யவில்லை. அவை கயிறு மூலம் கட்டி வைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளன. ஜன்னல் கம்பிகள் மற்றும் மின்விளக்குகள் ஆகியவை சேதம் அடைந்துள்ளன. இதனால், அதில் தொலைவு பயணம் செய்யும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆவடியில் இருந்து ஆரணிக்கு பயண நேரம் ஒன்றரை மணி நேரம் ஆகும். இந்தப் பேருந்தில் பயணம் செய்தால், பயணிகளுக்கு இடுப்பு வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவது நிச்சயம்.

சாதாரணப் பேருந்துகளாகக்கூட இயக்குவதற்கு தகுதியில்லாத இப்பேருந்துகள், சொகுசுப் பேருந்துகள் என்ற பெயரில் இயக்கப்படுவதோடு, கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகருக்குள் இயக்கப்பட்டு சேதம் அடைந்த இதுபோன்ற பேருந்துகள் புறநகர் பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் சொகுசுப் பேருந்துகளை இயக்கினால், அதற்கேற்ற வசதிகளை பயணிகளுக்கு அளிக்க வேண்டும். கட்டணம் மட்டும் கூடுதலாக வசூலித்துவிட்டு, இதுபோன்ற லாயக்கற்ற பேருந்துகளை இயக்குவது எந்தவகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து, மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக பணிமனைக்கு அனுப்பி சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோல் பழுதடைந்த பேருந்துகள் உடனடியாக கண்டறியப்பட்டு அவை சரிசெய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

12 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்