கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் பார்க்க பெற்றோர் உதவ வேண்டும்: ஓபிஎஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மாணவ, மாணவியர் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு தளமாக கல்வி தொலைக்காட்சி உள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பி, மாணவர் சமுதாயத்துக்கு வழிகாட்டும் வகையில், 'கல்வி தொலைக்காட்சி' தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், கல்வி தொலைக்காட்சி சேனலை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

''அறிவுத் தேடலை மேலும் விரிவாக்க மனிதர்கள் பயன்படுத்திய கருவிதான் கல்வி. ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகைப் பார்க்கின்ற பார்வையை மாற்றக் கூடிய மாபெரும் ஆற்றல் கொண்டது கல்வி. எதிர்காலம் முழுமைக்குமான உண்மையான சேமிப்பு, இன்றைய தினம் கற்கின்ற கல்வியே ஆகும்.

மாணவர்கள், மாணவிகள் ஒவ்வொருவருக்குள்ளும், ஓராயிரம் திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. அந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களது குரலைக் காது கொடுத்து கேட்பதும், அவர்களது வெற்றிக்கு தக்க வழி காட்டுவதுமே ஓர் ஆசிரியரின் உன்னத பணி ஆகும்.

அதே நேரத்தில் நாம் கற்கின்ற கல்வி, அரைகுறைக் கல்வியாக இருக்கக் கூடாது. நமது வாழ்க்கைக்கு உதவி செய்கின்ற கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் பக்கமே திரும்பாமல் கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்வை நடத்திக் கொண்டிருந்த கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளை பள்ளியின் பக்கம் திருப்பி, தமிழக மாணவர்களின் வளமான வாழ்க்கைக்கு சத்துணவுத் திட்டத்தின் மூலம் வித்திட்டார் எம்.ஜி.ஆர்.

மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக் கணினி முதலாக ஜியா மெட்ரி பாக்ஸ், 12 வண்ண கிரேயான்கள், புத்தகப் பை என எண்ணில்லாப் பொருட்களையும், ஈடில்லா திட்டங்களையும் வழங்கி தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை இமயத்தின் உயரத்திற்கு உயர்த்தியவர் ஜெயலலிதா.

அதன் தொடர்ச்சியாகத்தான், பள்ளி மாணவச் செல்வங்கள் பெரும்பயன் அடையும் வகையில், கல்வித் தொலைக்காட்சி என்னும் புதுமை முயற்சியை இந்த அரசு இன்று தொடங்குகிறது. இப்பணியை திறம்பட செயல்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பள்ளிக் கல்வித் துறையின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு கணமும் சிந்தித்து செயல்பட்டு வருகிறார்.

மாணவ, மாணவியர் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு தளமாக கல்வி தொலைக்காட்சி உள்ளது. நமது குழந்தைகளுக்கெல்லாம் வகுப்பறை என்பது வீட்டின் நீட்சியாகவும், வீடு என்பது வகுப்பறையின் நீட்சியாகவும் அமைந்திட வேண்டும். இதற்காகவே பள்ளிக் கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது.

இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி, நமது மாணவ, மாணவிகள் கல்வி தொலைக்காட்சியில் வரும் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகளையும், பாடப்பொருள் சார்ந்த நிகழ்ச்சிகளையும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்து தங்கள் அறிவினை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று மாணவச் செல்வங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு அவர்களது பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்