மேட்டூர் அணை நீர் மட்டம் 116.39 அடி: நீர்வரத்து சரிவால் முழுக்கொள்ளளவை எட்டுவது தாமதம்

By செய்திப்பிரிவு

ஆர்.சீனிவாசன்

நீர் மட்டம் 116.39 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து சரிவடைந்துள்ளதால், மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது.

கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, தமிழகத்துக்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 13-ம் தேதியன்று 100 அடியை எட்டியது. 120 அடி உயரம் கொண்ட அணைக்கு, அன்றைய தினம் விநாடிக்கு 2.30 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. எனவே, ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக சரிவடையத் தொடங்கியது. லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருந்த நிலை மாறி, ஆயிரம் கனஅடிகளாக நீர் வரத்து குறைந்தது.

அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்து. இது மேலும் சரிவடைந்து நேற்று காலை விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. மாலையில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்தில் மேலும் சரிவு ஏற்பட்டது.

நீர் வரத்தில் தொடர் சரிவு ஏற்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் உயரும் வேகம் குறைந்துவிட்டது. குறிப்பாக, அணையின் நீர் மட்டம் உயரும்போது, அணையின் நீர் தேங்கும் பரப்பு விரிவடையும் என்பதால் நீர் மட்டம் உயரும் வேகம் மட்டுப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், அணை கால்வாய் பாசனத்துக்கும் விநாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 115.82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை 8 மணி 116.39 அடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர் இருப்பு 87.82 டிஎம்சி-யாகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 4.61 உயரத்துக்கு நீர் நிரம்ப வேண்டும்.

ஆனால், அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 10,500 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் மட்டுமே நீர் வந்து கொண்டுள்ளது. எனவே, அணை முழுக்கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் சில நாட்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும், அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவும் ஏறத்தாழ சமமான நிலைக்கு வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு கூடுதல் நீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அணையின் நீர் மட்டம் உயருவதற்குப் பதிலாக, மெதுவாக குறையத் தொடங்கும்.

எனவே, அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் சில நாட்கள் தாமதமாகலாம். ஒருவேளை கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நிரம்புவதற்கு வாய்ப்பு ஏற்படும்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

4 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

42 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

48 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்