திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி பெரிய உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் 100 கிலோவுக்கு மேல் குப்பை சேர்ந்தால் சேகரிப்பு நிறுத்தம்: அவர்களாகவே அழிக்க மாநகராட்சி வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

டி.ஜி.ரகுபதி

கோவை

திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி, மாநகரில் 100 கிலோவுக்கு மேல் சேகரமாகும் பெரிய உணவகங் கள் உள்ளிட்ட இடங்களிலிருந்து குப்பை சேகரிப் பதை மாநகராட்சி நிர்வாகத்தினர் நிறுத்தியுள்ளனர்.

கோவை மாநகரில் தினசரி சராசரியாக 950 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் கணக்கின்படி, மாநகரில் பெரிய உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள், திருமண மண்டபங்கள் என 700-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. அதில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை மட்டும் 500. மேற்கண்ட இடங்களில் இருந்து மட்டும் தினசரி 160 டன்னுக்கும் மேல் குப்பை சேகரிக்கப்படுகிறது.

‘மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016’-ன் படி, ஒரு நாளைக்கு 100 கிலோவுக்கு அதிகமாக (பல்க் வேஸ்ட்) குப்பை சேகரிக்கப்படும் இடங்களில், அந்த குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரமாக தயாரிக்க மையம் அமைத்திருக்க வேண்டும். இந்த விதி தொடர்பாக மேற்கண்ட பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, தினசரி 100 டன்னுக்கும் மேல் குப்பை சேகரமானால், உரம் தயாரிப்பு மையம் அமைத்திருக்க வேண்டும் எனவும், ஆகஸ்ட் மாதம் முதல் மேற்கண்ட இடங்களில் இருந்து குப்பை சேகரிக்கப்படாது எனவும் கடந்த சில வாரங்களாக வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும்போது, ‘‘வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் தினசரி 500 டன் குப்பையை தரம் பிரித்து அழிக்கும் அளவுக்கு மையம் உள்ளது. இதுதவிர, 100 டன் மக்கும் குப்பையை உரமாக தயாரிக்க மையம் உள்ளது. குறிப் பிட்ட டன் குப்பை பயோ-கேஸ் உற்பத்திக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 350 டன் குப்பை வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு வராமல் அழிக்க, 69 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகரில், தினசரி 100 கிலோவுக்கு மேல் குப்பை சேகரமானால், தங்களது இடங்களிலேயே மையம் அமைத்து அவற்றை உரமாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.

100 கிலோவுக்கு மேல் குப்பை சேகரமாகும் இடங்களில் இருந்து குப்பை சேகரிப்பது நடப்பு மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மாநகரில் 183 அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பையை, அவர்களே தனியார் மூலமாக அழித்துக் கொள்கின்றனர். உணவக நிர்வாகிகள் சங்கத் துடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டுள்ளன.

உரம் தயாரிப்பு மையம் அமைக்க மாநகராட்சி இடம் ஒதுக்க வலியுறுத்தியுள்ளனர். அது பரிசீலனையில் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகள் படி, மாநகரில் குப்பை வரி நிச்சயம் வசூலிக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்