அன்புள்ள ரஜினிகாந்த், தயவுசெய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் திரும்பவும் மகாபாரதத்தை படிக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370-வது சட்டபிரிவு நீக்கப்பட்டதை மிக நல்லமுறையில் அமித்ஷா செய்திருக்கிறார் என ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ரஜினிகாந்திடம் இருந்து இதைப் போன்ற கருத்தினை எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்த கருத்தை படித்த பிறகு நான் மிகவும் சோர்வடைந்தேன். ரஜினிகாந்த் இயல்பிலேயே மிகவும் நல்ல மனிதர். யாருக்கும் தீங்கு இழைக்காதவர். ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர். எனவே, அவர் அப்படி சொல்லியிருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது.

ரஜினிகாந்த் ஆன்மீக உணர்வு என்பது மத உணர்வு என தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகம் என்பது மதம் சார்ந்தது அல்ல. நமக்கு மேற்பட்ட ஒரு சக்தியின் மீது நம்பிக்கையும், அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கமும், நேர்மையும், சமாதானமும், மகிழ்ச்சியும் உடைய ஒரு வாழ்க்கையை மேற்கொள்வதும் - யாருக்கும் தீங்கு இழைக்காத, எல்லோரையும் நேசிக்கக் கூடியதுமான ஒரு தத்துவம் தான் ஆன்மீகம்.

மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கடவுளையும், அதற்கு ஒரு பெயரையும், அதற்கென்று ஒருசில சடங்குகளையும், ஒருசில விதிமுறைகளையும், அந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களை பிற மதத்தவர் என்றும் அல்லது மதவிரோதிகள் என்றும் முத்திரை குத்தி, பகைமை பாராட்டுவது மத உணர்வாகும்.

இன்றைக்கு அமித்ஷாவும், மோடியும் காஷ்மீருக்கு இருந்த சில சிறப்பு சலுகைகளை நீக்கி ஒரு மாநிலத்தை சுத்தம் செய்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இதை போன்ற சிறப்பு சலுகைகள் ஹிமாச்சல பிரதேசத்திலும், வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களிலும், கர்நாடகத்தில் உள்ள கூர்க் பகுதியிலும் நடைமுறையில் உள்ளது. எப்படி காஷ்மீரில் இல்லாதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதோ, அதுபோல, மேற்கண்ட இந்த மாநிலங்களிலும் அந்த மாநிலத்தை சாராதவர்கள் நிலம் வாங்க முடியாது.

காஷ்மீரத்தில் சிறப்பு சலுகைகளுக்கான 370-வது அரசியல் சட்டப்பிரிவை நீக்கிய மோடி அரசாங்கம் மேற்கண்ட மாநிலங்களில் இதே சிறப்பு சலுகைகளை நீக்காதது ஏன் ? காரணம், காஷ்மீரில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்பதுதானே ?

ரஜினிகாந்த்: கோப்புப்படம்

அநீதியை கண்டு சிலிர்த்து எழுகிற நமது கதாநாயகன் பாட்ஷா, காஷ்மீரத்திற்கு ஒரு நீதி, பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்கிற அமித்ஷாவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறரா ?

மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜூனர் என்றும் ரஜினி அவர்கள் சொல்கிறார். ஆனால், இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனர் என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறுகிறார். நல்லவேளை ரஜினிகாந்தினுடைய உள்ளுணர்வு இங்கு வேலை செய்திருக்கிறது. ஏனென்றால், மோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள், இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜூனரும் அல்ல.

பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜூனருமாக இருக்க முடியும். அன்புள்ள ரஜினிகாந்த், தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள்", என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்