ஆற்றுப்பாலம் இல்லாத அவலம்: மரக்கட்டையில் பிணத்தைக்கட்டி கரைபுரண்டோடும் வெள்ளத்தில் நீந்திச் சென்ற கிராம மக்கள் 

By செய்திப்பிரிவு

ஈரோடு,

சத்தியமங்கலம் அருகே ஆற்றுப்பாலம் இல்லாததால், இறந்த பெண் ஒருவரின் உடலை மரக்கட்டைகளில் வைத்துக் கட்டி வெள்ளம் கரைபுரண்டோடும் ஆற்றை நீந்திக் கடந்து வனக்கிராம மக்கள் கொண்டு சென்ற பரிதாபம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது தெங்குமரஹாடா கிராமம். முற்றிலும் ஒதுங்கி வனத்துக்குள் அமைந்துள்ள கிராமத்திலிருந்து நகர் பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் ஊரை ஒட்டி ஓடும் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று அங்கிருந்து பேருந்து மூலம் செல்லலாம். அல்லது சாலை வசதி இல்லாத மண் சாலையில் 25 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்ல வேண்டும். இதனால் அந்த கிராமத்துப் பொதுமக்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வந்தனர்.

தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பரிசல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தெங்குமரஹாடா ஊராட்சிக்குட்பட்ட அள்ளிமாயார் பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி சுப்ரமணி (48) என்பவரின் மனைவி நீலியம்மாள் (44) உடல் நிலை சரியில்லாததால் கடந்த 7-ம் தேதி தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்து முதலுதவி செய்யப்பட்டு பலனளிக்காததால் பரிசல் மூலம் மாயாற்றைக் கடந்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.மறுநாள் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அதனால் அவரது உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான கல்லம்பாளையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிராமத்துக்குச் செல்ல முடிவெடுத்தனர். ஆற்றைக் கடக்க வேண்டும், ஆனால் பெருமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பரிசல் ஓட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் நீலியம்மாள் உடலை கிராமத்துக்குக் கொண்டு செல்ல மக்கள் திகைத்து நின்றனர்.

பின்னர் அங்குள்ள ஆதிவாசி மக்களின் உதவியுடன் நீலியம்மாள் சடலத்தை மரக்கட்டைகளில் வைத்துக் கட்டி, ஆற்றுவெள்ளத்தில் இறக்கி சுற்றிலும் அனைவரும் பிடித்தபடி நீந்திக் கடந்தனர்.

கரைபுரண்டோடும் வெள்ளத்தில் மரக்கட்டைமேல் கட்டப்பட்ட பிணத்துடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக நீந்தி அக்கரைக்குச் செல்லும் காட்சியை அங்குள்ள ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இது போன்ற நிலையால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்த அவலத்தைப் போக்கும் விதத்தில் கல்லம்பாளையம் மாயாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டித் தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீன்டநாள் கோரிக்கையாக உள்ளது.

தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலம் அமைக்கப்பட்டிருந்தால், இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது எனக் கூறும் பொதுமக்கள், இனியாவது பாலம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 mins ago

இந்தியா

45 mins ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

11 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்