காஷ்மீரில் சொத்து வாங்க அனுமதி வேண்டும்: அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய மதுரை வழக்கறிஞர்

By பாரதி ஆனந்த்

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சொத்து வாங்க அனுமதி கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

வழக்கறிஞர் முத்துக்குமார் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர். இவர் பாஜக உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சொத்து வாங்க அனுமதி கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இவர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அண்மையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

இதனைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் காஷ்மீர், லடாக் பகுதி மக்களுக்கு புதிய யுகம் தொடங்கியிருக்கிறது எனக் கூறினார்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நான் ஒரு பாஜக தொண்டன். ஒரு தொண்டனாக சட்டப்பிரிவு 370 ரத்தை நான் மகிழ்ந்து கொண்டாடுகிறேன். இதற்குக் காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், காஷ்மீரில் மற்ற மாநில மக்கள் குடியமர இந்த அரசாங்கம் தேவையான வரைமுறைகளை விரைவில் வகுக்கும் என நம்புகிறேன்.

சட்டப்பிரிவு 370 ரத்து மற்ற மாநிலத்தவரும் அங்கு நிலம் வாங்க வழிவகை செய்துள்ள நிலையில் நான் காஷ்மீரில் எந்த நிபந்தனையுமின்றி குடியேற விரும்புகிறேன். அதற்காக காஷ்மீரில் எனக்குச் சொந்தமாக நிலம் வாங்க விரும்புகிறேன். அதன்மூலம் தென் பகுதியிலிருந்து காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் பாஜக உறுப்பினர் என்ற பெருமையைப் பெற விரும்புகிறேன். எனது கோரிக்கையைப் பரிசீலித்து ஆவன செய்வீர்கள் என நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக 'இந்து தமிழ்; இணையதளத்துக்கு வழக்கறிஞர் முத்துக்குமார் அளித்த பேட்டியில், "லண்டன், அமெரிக்காவில்கூட ஒரு இந்தியர் சொத்து வாங்க முடிந்த நிலையில் நம் நாட்டிலுள்ள காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது என்றிருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. அதனால் அங்கு சொத்து வாங்கும் ஆவல் எழுந்துள்ளது.

பாஜகவின் இமாலய சாதனையை சிலர் அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்குச் சாதகமான முடிவு என விமர்சிக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

காஷ்மீரில் நிலம் நிறைய இருந்தாலும் மக்கள் தொகை குறைவு. அங்கு பிற மாநிலத்தவரும் குடியேற வேண்டும். அப்போதுதான் அங்கு தொழில்வளம் பெருகும். தொழில் வர்த்தக நிறுவனங்களை மட்டும் திறந்தால் போதாது. வளர்ச்சிக்கு வாங்கும் சக்தியும் வேண்டும்.

காஷ்மீரின் வளர்ச்சிக்காக மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் அங்கு குடியேற வேண்டும். அடிப்படையில் நான் ஒரு பாஜக தொண்டர். தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராக எனது சட்டப்பணியை காஷ்மீரில் தொடர விரும்புகிறேன். அதற்காகவே அங்கு நிலம் வாங்க விரும்புகிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்