வைகோ அரசியல் சந்தர்ப்பவாதி: உங்களுக்கு எதிரி பாஜகவா? காங்கிரஸா?-கே.எஸ்.அழகிரி காட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை

வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்டவர். 18 ஆண்டுகள் எம்.பி. ஆக்கி அழகு பார்த்த கருணாநிதியின் முதுகில் குத்தியவர் வைகோ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் முன்னறிவிப்பின்றி உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

ஆனால், ஒரே உறுப்பினரை மட்டும் கொண்ட மதிமுகவின் சார்பாக வைகோ பேசுவதற்குத் தீவிர முயற்சியை மேற்கொண்டார். இதைப் பார்த்த அமித் ஷா, "வைகோவின் பேச்சைக் கேட்க ஆவலோடு இருக்கிறோம். அவரை அனுமதியுங்கள்" என்று பரிந்துரை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தன்னை அண்ணாவின் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்கிற வைகோ, கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைக்க முயற்சிக்கும் பாஜகவை கடுமையாக எதிர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினார். இப்படிப் பேசுவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே கருதப்படுகிறது.

நீண்டநெடிய நாடாளுமன்ற அனுபவம் கொண்ட வைகோ, கருத்துகளை வெளிப்படுத்துவதை விட, உரக்கக் குரல் எழுப்புவதன் மூலம் நிதானத்தையும், பக்குவத்தையும் இழந்திருப்பதைக் காண முடிகிறது. ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆத்திரமும், காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது.

தெருமுனையில் மேடை போட்டு மைக் பிடித்து ஆவேசமாகக் கத்துவது போல, நாடாளுமன்றத்தில் கத்திப் பேசுகிறார். எச்சரிக்கிறேன் என்பது போலவும், சாபம் தருவது போலவும் பேசுகிறார். அவர் பேசிய போது பிரதமர் மோடியே கை தட்டினாராம், ரசித்தாராம். வைகோ எதை எதிர்பார்த்தாரோ, அது நடந்திருக்கிறது.

வைகோ: கோப்புப்படம்

காஷ்மீர் பிரச்சினையில் வைகோ பேச எடுத்துக்கொண்ட நேரத்தின் பெரும் பகுதியில் அவர் காங்கிரஸை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். "என்னைப் பேச விடுங்கள். நான் காங்கிரஸைத் தாக்கிப் பேச வேண்டுமென்று" அவர் அனுமதி கேட்ட விதமும், அதை அமித் ஷா ஆமோதித்து அனுமதி வழங்க பரிந்துரை செய்ததும் மாநிலங்களவையில் நடந்திருக்கிறது.

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான பிறகு நிறைய மாற்றங்களைக் காண முடிகிறது. சுப்பிரமணியன் சுவாமியைச் சந்திக்கிறார், மோடியைச் சந்திக்கிறார், பாஜகவின் தலைவர்களைச் சந்திக்கிறார். அவர் பாஜகவின் ஆதரவாளர் என்ற முத்திரையைத் தவிர்ப்பதற்காக மன்மோகன் சிங்கையும் சந்திக்கிறார். இதன்மூலம் வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வைகோவின் அரசியல் பாதையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதைப் புரிந்துகொள்வார்கள். 18 ஆண்டுகாலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து அழகு பார்த்த திமுகவுக்கு பச்சைத் துரோகம் செய்தவர், கருணாநிதிக்காக உயிரை விடுவேன் என்று கர்ஜித்த வைகோ, பலமுறை அவரது முதுகில் குத்தியிருக்கிறார்.

ஆனால், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவரை வேலூர் சிறையில் சென்று சந்தித்து தமது கூட்டணியில் இணைத்துக்கொண்ட கருணாநிதியின் பெருந்தன்மை எங்கே ? வைகோவின் சிறுமைத்தனம் எங்கே ?

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்த போது அதற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் வைகோ. இதற்காகவே மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியவர் வைகோ. இதற்குக் காரணம் "திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடக் கூடாது" என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்.

காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் என்கிறார். இதைத்தான் பாஜகவும் சொல்கிறது. தத்துவ இயலில் ஒரு வாதம் உண்டு. தீவிர இடதுசாரிகளும், வலதுசாரிகளும் வெவ்வேறாக காட்சி அளிப்பார்கள். ஆனால் ஒரே விதமாகப் பேசுவார்கள். அதைத் தான் மோடியும், வைகோவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நேருவினுடைய மிக உறுதியான லட்சிய நோக்கினாலும், நடவடிக்கையினாலும்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இல்லையேல், ஜின்னாவின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானோடு இணைந்திருக்கும். ஒரு வாரகால நடவடிக்கையின் மூலம் உலகின் மிக அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு சேர்த்த பெருமை நேருவுக்கு உண்டு. இதைத் துரோகம் என்று வைகோ சொல்கிறாரா ?

காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் வைகோ, என்ன துரோகம் செய்தது என்று சொன்னால் பதில் கூறத் தயாராக இருக்கிறோம். பாம்பையும், கீரியையும் சண்டையிட வைப்பதாக சொல்லும் மோடி மஸ்தான், கடைசி வரை அந்த சண்டையை நடத்தவே மாட்டான்.

அதுபோல, துரோகம், துரோகம் என்று சொல்லும் வைகோ, எது துரோகம் என்று சொல்லாமல் தவிர்க்கக் கூடாது. திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை உலகமே அறியும். அது அவருக்கு புரியவில்லை என்றால், அதைப் புரியவைக்கிற ஆற்றல் தமிழக காங்கிரஸுக்கு உண்டு.

அண்ணாவின் பெயரை மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்குகிற வைகோ, காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியைப் பறிக்கிற பாஜகவின் சதித்திட்டத்திற்குத் துணை போகலாமா ? இதை விட அண்ணாவின் கொள்கைக்கு வைகோ என்ன துரோகம் செய்துவிட முடியும் ? திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் மதிமுக இருக்கிறது.

மாநிலங்களவையில் ஒரே உறுப்பினராக இருக்கிற மதிமுகவின் பிரதிநிதி வைகோ காங்கிரஸைப் பற்றி விமர்சிப்பதை எதிர்த்து நூறு உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் விமர்சனம் செய்து தோலுரித்துக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ? வைகோவுக்கு எதிரி பாஜகவா ? காங்கிரஸா ?

காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்துகொண்டு, காங்கிரஸையே விமர்சிக்கிற அரசியல் நாகரிகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் தொடருமேயானால் கடுமையான ஏவுகணைகளை காங்கிரஸ் கட்சியிலிருந்து வைகோ மீது ஏவி விடப்படும் என எச்சரிக்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்