வரலட்சுமி விரத பண்டிகையையொட்டி சாகுபடி: செண்டுமல்லி அமோக விளைச்சல்: விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எதிர்வரும் வரலட்சுமி விரத பண்டிகையை முன்னிட்டு, சாகுபடி செய்யப்பட்ட குட்டை ரக செண்டுமல்லி தோட்டங்களில் அறுவடை தொடங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி, கனகாம்பரம், கோழிக்கொண்டை உள்ளிட்ட பலவகையான பூக்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். கடந்த 3 மாதங்களாக திருவிழாக்கள் எதுவும் இல்லாத காரணத்தால் பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில், வரும் 9-ம் தேதி வரலட்சுமி விரத பண்டிகைக்காக செண்டுமல்லி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘‘வரலட்சுமி விரதம் பண்டிகைக்கு இங்கிருந்து, ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அதிகளவில் செண்டுமல்லி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக 40 நாட்களுக்கு முன்பு சுமார் 1500 ஏக்கரில் குட்டை ரக செண்டுமல்லி பயிரிட்டோம். தற்போது அறுவடை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டுகளில் விவசாயிகள் நெட்டை ரக செண்டுமல்லியை பயிரிட்டு வந்தனர். இந்த ரக செடிகள் சுமார் மூன்று அடி வளர்ந்த பின் தான் பூக்கள் பூக்கும். நெட்டை ரகத்தில் அதிக அளவுக்கு சிறிய அளவிலான பூக்கள் பூப்பதால் பாதியளவுக்கு பூக்கள் வீணாகிவிடும். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த லாபம் கிடைத்து வந்தது.

தற்போது குட்டை ரக செண்டுமல்லிச் செடிகளை பயிரிட்டுள்ளோம். இந்த ரக செடிகள் நடவு செய்யப்பட்டு, ஒரு அடி உயரம் வளர்ந்தவுடன் பூக்கள், பூக்கத் தொடங்கும். இதில், பெரும்பாலும் பெரிய அளவிலான பூக்களாகப் பூப்பதால் இரட்டிப்பு விளைச்சல் கிடைக்கிறது. மேலும் செடிகள் நட்டு 40 நாட்களில் பூக்கள் அறுவடைக்கு வந்துவிடுகிறது. 5 நாட்களுக்கு ஒரு முறை பூக்கள் அறுவடை செய்யும் நிலையில் அதிக லாபம் கிடைத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செண்டுமல்லிப் பூக்கள் கிலோ ரூ, 5-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பண்டிகை சீசன் தொடங்கி உள்ளதால், கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆகிறது. மேலும் திருமணம், பண்டிகைக் காலம் தொடர்ந்து வருவதால் மேலும் விலை உயரும். குறிப்பாக வரலட்சுமி விரத பண்டிகைக்கு பூக்கள் விலை உயர்ந்து நல்ல விலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது,’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

சினிமா

3 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்