சுஷ்மா ஸ்வராஜ் மறைவு; தமிழகத்தின் மீது அன்பு கொண்டவர்: முதல்வர், தலைவர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடந்த 2016-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில், நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) சுஷ்மாவுக்கு மீண்டும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக அவரைச் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சுஷ்மாவுக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி சுஷ்மா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், தேசியக் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழகத் தலைவர்களும் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

மத்திய வெளியுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகவும், பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், அரசியல் உலகில் அதிகம் மதிக்கப்பட்ட பெண் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.

வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், வெளிநாடுகளில் பிரச்சினைகளில் சிக்கிய இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து, இந்தியர்களின் பேரன்பைப் பெற்றவர். மேலும், சமூக வலைதளங்களில் இந்தியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதிலளித்து, இளைய தலைமுறையினரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

திமுக தலைவர் ஸ்டாலின்:

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னணித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்குக் கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாகச் செயலாற்றி பெருமை சேர்த்தவர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

2014 ஆம் ஆண்டில் ஐநா மனித உரிமைப் பேரவையில், இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்தக் கோரி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக குழு 16.07.2014 அன்று சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் சந்தித்துப் பேசியது. அதன் பயனாக அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா வெளியேறிவிட்டது. அவரது மனிதநேயத்துக்கு இன்னும் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:

சிறந்த நாடாளுமன்றவாதி, தலைவர், பேச்சாளரை இந்தியா இழந்துவிட்டது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக பெண்மையோடு கூடிய ஆளுமை, அந்த நாட்டின் தலைவிக்குள்ளே ஒரு குடும்பத்தலைவியை நான் சுஷ்மா ஸ்வராஜிடம் கண்டிருக்கிறேன். அன்பு, அறிவு, ஆற்றல், ஆளுமை, எளிமை அனைத்தும் கொண்ட தலைவி. என் நெஞ்சம் கண்ணீர் வடிக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பு.

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா:

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. வெளியுறவுத் துறைக்கு சிறப்பு சேர்த்த திறமையான நிர்வாகி. இவரது மரணம் நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:

ஒரு அமைச்சர், ஒரு கட்சித் தலைவர் என இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழர்களின் துயர் துடைத்த தாயாக சுஷ்மா ஸ்வராஜை நான் பார்க்கிறேன். தமிழர்களின் மனதில் அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்‌சே பற்றி எத்தகைய சிந்தனை இருந்ததோ, அதே உணர்வுடனே அவரை எதிர்கொண்டார். இத்தகைய மேன்மை கொண்ட ஒரு தாயை இழந்த துயரத்தை நான் அடைகிறேன். நான்அவரது இழப்பு கட்சிக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு என்பதை விட தமிழர்கள், குறிப்பாக மீனவச் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் அவரது மறைவைப் பேரிழப்பாக நான் கருதுகிறேன்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்:

தமிழகத்தின் மீதும், நமது மீனவச் சகோதரர்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இந்திய அரசியல் வரலாற்றில் தனக்கென தனி வரலாற்றை எழுதிச் சென்றுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:

இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க பெண் தலைவராகவும்,சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். மிக இளம் வயதிலேயே அரசியலில் உயர் பதவிகளை வகித்த அவர், ஜெயலலிதாவின் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார். சுஷ்மா ஸ்வராஜின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

வணிகம்

34 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

44 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்