ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

ராஜீவ் கொலை வழக்கில் வாழ்நாள் சிறைதண்டனை அனுபவித்து முடித்த நிலையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்க்கும் மத்திய அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

இவ்வழக்கை தமிழக அரசு சிறப்பாக நடத்தி 7 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைதண்டனை அனுபவித்து முடித்த நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்க்கும் மத்திய அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. இவ்வழக்கை தமிழக அரசு சட்ட வலிமையுடன் எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, இவர்களையும் ஏற்கெனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு வழக்கை அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி ஆணையிட்டது.

பின்னர் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அந்த தேதியில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அதன்பின் ஓராண்டு கழித்து இந்த வாரத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவிருப்பது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டு 24 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்களில் பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதியதாக அவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் ஒப்புக்கொண்டுள்ளார். இதிலிருந்தே பேரறிவாளன் அப்பாவி என்பது உறுதியாகிவிட்டது.

மற்றவர்களும் இதேபோல் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்கள் தான். அப்படிப்பட்டவர்களை எவ்வளவு விரைவாக விடுதலை செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி இவ்வழக்கை விரைந்து விசாரிக்கும்படி தமிழக அரசு கோரியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தவறிவிட்டது. அதனால் தான் 7 தமிழர்களின் விடுதலை ஓராண்டுக்கும் மேலாக தாமதமாகி விட்டது.

இனியும் இந்த வழக்கு தாமதப்படுத்தப்படாமல் விசாரித்து முடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு எவ்வாறு விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ஏற்கெனவே வகுத்திருக்கிறது.

தண்டிக்கப்பட்டவர்களின் விடுதலை தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்பு குறித்து 7 வினாக்களை எழுப்பிய நீதிபதி சதாசிவம், இவற்றுக்கு விடை கண்டு அதனடிப்படையில் 7 தமிழர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என்று தமது தீர்ப்பில் அறிவுரை வழங்கியுள்ளார். எனவே, அந்த 7 வினாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளித்தாலே அவர்களின் விடுதலை உறுதியாகிவிடும்.

எனவே, அதற்கேற்ற வகையில் தமிழக அரசு உத்திகளை வகுக்க வேண்டும். இந்த வழக்கின் தொடக்கக் கட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி வாதிட்டார். இப்போது இந்த வழக்கு அரசியலமைப்பு சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதால் அரசியலமைப்பு சாசனத்தில் வல்லமை பெற்ற மேலும் சில மூத்த வழக்கறிஞர்களையும் தமிழக அரசு கூடுதலாக அமர்த்திக் கொள்ளலாம்.

இந்த வழக்கில் விடுதலை என அறிவிக்கப்பட்டு அதன்பிறகும் 15 மாதங்களாக சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் பேரறிவாளன் உள்ளிட்டோர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்காரணமாகவே பேரறிவாளனுக்கு பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. மற்றொருபுறம் முருகன் துறவறம் பூண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றுக்கானத் தீர்வு இவர்களின் உடனடி விடுதலையைத் தவிர வேறொன்றுமில்லை.

அதுமட்டுமன்றி, இவ்வழக்கு இந்த 7 பேரின் விடுதலை தொடர்பானது மட்டுமல்ல. இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரவரம்பு நிர்ணயிக்கப்பட்டால், அப்பாவிகள் காலவரையின்றி சிறைகளில் வாடுவது போன்ற மனித உரிமை மீறல்கள் தடுக்கப்படும்.

எனவே, இவ்வழக்கை தமிழக அரசு சிறப்பாக நடத்தி 7 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

36 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

53 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்