'சரவணபவன்' ராஜகோபால் காலமானார் 

By செய்திப்பிரிவு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் இன்று காலமானார். 

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக் கொலை செய்த குற்றத்துக்காக, சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் தரப்பில் மேல்முறையீடு செய்த போது, அரசுத் தரப்பில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என, வழக்கு தொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கில், ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஜூன் 7 ஆம் தேதி ராஜகோபால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.

தனது உடல்நிலையைக் காரணம் காட்டி சரணடையாமல் இருந்த ராஜகோபால், கடந்த 9-ம் தேதி தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தார். ஸ்ட்ரெட்சரில் படுத்தபடி ராஜகோபால் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில், அவருக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ராஜகோபால் இன்று (வியாழக்கிழமை) காலை காலமடைந்ததாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உறவினர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

ராஜகோபால் பின்னணி: 

திருச்செந்தூர் அருகே உள்ள புன்னையடி எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். குடும்ப வறுமையால், 7 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட ராஜகோபால், சென்னை வந்து ஓட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் வேலை பார்த்தார். பின்னர் மளிகைக் கடையொன்றில் வேலைபார்த்த ராஜகோபால், கே.கே.நகரில் சிறியளவில் மளிகைக் கடையொன்றையும் ஆரம்பித்தார். அதன்பின்னர் படிப்படியாக தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, 1982 ஆம் ஆண்டில் சென்னை கே.கே.நகரில் சரவணபவன் ஓட்டலை ராஜகோபால் முதன்முதலில் தொடங்கினார். சில ஆண்டுகளிலேயே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் 33-க்கும் அதிகமான கிளைகள், வெளிநாடுகளில் 45-க்கும் அதிகமான கிளைகள் என சரவணபவன் ஓட்டலின் கிளைகள் விரிவடையத் தொடங்கியது. சரவணபவன் ஓட்டலுக்கு என நற்பெயரும் கிடைத்தது. 

ஓட்டல் துறையில் மிகப்பெரும் உயரத்தை அடைந்த ராஜகோபால், சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கி அவரது பெயரும் புகழும் சரிவடையத் தொடங்கியது. ஏற்கெனவே ராஜகோபாலுக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில், ஜோதிடர் கூற்றுப்படி, ஓட்டல் உதவி மேலாளர் மகள் ஜீவஜோதியை திருமணம் செய்ய நினைத்தார் ராஜகோபால். ஆனால், ஜீவஜோதி பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால், பிரின்ஸ் சாந்தகுமாரை ராஜகோபால் கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியானார் ராஜகோபால். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்