பலன் கொடுக்கும் பந்தல் காய்கறிகள்!

By எம்.நாகராஜன்

தென்னை, கரும்பு, வாழை என பணப் பயிரை சாகுபடி செய்வோருக்கு ஆண்டுக்கு ஒருமுறை பலன் கிடைக்கும். அதுவும், மழையின் கருணை இருந்தால் தான் சாத்தியமாகும். சிறு, குறு விவசாயிகள் அல்லது அன்றாடம் வருவாய் ஈட்டும் தேவையுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது காய்கறி சாகுபடி.

சர்வதேச அளவில் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. இதிலும் முதலிடத்தில் இருப்பது சீனா. 2009-ம் ஆண்டு  புள்ளிவிவரப்படி 7.958 மில்லியன் ஹெக்டேரில்,  133.74 மில்லியன் டன் காய்கறிகளை இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்துள்ளனர். தமிழகத்தின் மொத்த காய்கறி சாகுபடி பரப்பு 2.63 லட்சம் ஹெக்டேர். 

தேசிய அளவில் ஒரு ஹெக்டேரில் சராசரி விளைச்சல் 16.7 டன். ஆனால்,  தமிழக உற்பத்தித் திறன்  28.9 டன். ஏறத்தாழ 50 வகை காய்கறிகளை தமிழக விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, கொடிவகைக் காய்கள், வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முருங்கை உள்ளிட்டவை முக்கிய காய்கறி பயிர்கள். தினசரி வருமானம், கூடுதல் லாபம், அதிக வேலைவாய்ப்பு, குறுகிய பயிர், மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்பு, ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஆகியவை காய்கறி சாகுபடியின் முக்கிய அம்சங்கள்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி,  சொட்டுநீர்ப் பாசன முறை மூலம் பந்தல் காய்கறி வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் விவசாயிகள்.  மடத்துக்குளம் வட்டாரத்துக்கு உட்பட்ட  விவசாயிகள், திருமூர்த்தி, அமராவதி அணைகளின் நீரை நம்பி, பல லட்சம் ஏக்கரில் உணவு தானியங்களை  உற்பத்தி செய்கின்றனர். 

ஆனால், மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. எனினும், கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம், சொட்டுநீர்ப்  பாசனத்தை பயன்படுத்தி காய்கறி உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

மடத்துக்குளம் வட்டாரத்தில் 21 வருவாய் கிராமங்கள் உள்ளன. துங்காவி, மெட்ராத்தி, ராமேகவுண்டன்புதூர், காரத்தொழுவு, கணியூர், கடத்தூர், கொழுமம், குமரலிங்கம்  உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக் கணக்கான விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். அண்மைக்காலமாக நிறைய விவசாயிகள் பந்தல் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், கோவைக்காய், அவரை உள்ளிட்ட பந்தல் காய்கறி ரகங்களை அதிக அளவில் பயிரிடுகின்றனர். இதுகுறித்து மெட்ராத்தி பகுதி விவசாயிகள் கூறும்போது, “கொடி வகையான பீர்க்கங்காய்க்கு பந்தல் அமைப்பது அவசியம். குறைந்த முதலீட்டில் பீர்க்கங்காய் பயிரிட்டு,  ஹெக்டேருக்கு 14 முதல் 15 டன் வரை மகசூல் பெறலாம். பொதுவாக மண் பாங்கான,  தண்ணீர் தேங்காத மண் வகைகள் இதற்கு ஏற்றதாகும். 

கோடைகாலம், மழைக்காலம் என இரு காலங்களிலும் சாகுபடி செய்யலாம். எனினும், வெப்பம் குறைவாக இருப்பது நல்லது.  ஜூலை, ஜனவரி மாதங்களில் நாற்று படரும். ஹெக்டேருக்கு 1.50 கிலோ விதை தேவைப்படும். 

தகுந்த இடைவெளியில் குழிகள் தோண்டி, குழிக்கு மூன்று என்ற அளவில் விதை விதைக்க வேண்டும். முளைவந்த பிறகு, ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டுவிட்டு,  மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும். முளைவந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும். களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க 
வேண்டும். 2 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய,  தாவரத்துக்கு தாங்கிகளை அமைக்க வேண்டும். 

விதை ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் மகசூல் பெறலாம். தொடர்ந்து, ஒரு வார இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். விவசாயிகள் இந்த முறையைக் கடைப்பிடித்தால், ஒரு ஹெக்டேருக்கு 14 முதல் 15 டன் வரை மகசூல் பெற்றுப் பயனடையலாம்”  என்றனர்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஞானசேகர் கூறும்போது, “மடத்துக்குளம் பகுதியில் தக்காளி, வெங்காயம், வெண்டை, பூசணி, தர்பூசணி, அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், மல்லி, புதினா ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பந்தல் காய்கறிகளும் நல்ல விளைச்சல் தருவதால், விவசாயிகள் அதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

25 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

33 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

39 mins ago

ஆன்மிகம்

49 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்