பிளஸ் 2-வில் முதலிடம் பெற்ற 21 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசு வழங்கினார்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த 21 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக பள்ளிகளில், 2015-ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.6 சதவீதம், 10-ம் வகுப்பில் 92.9 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் 10- ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தமிழை ஒரு மொழிப்பாடமாக படித்து அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு காசோலைகள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் மேற்படிப்புக்கான செலவையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, 2014-15-ம் கல்வியாண்டில் பிளஸ் 2-வில் தமிழை மொழிப்பாடமாக கொண்டு அரசு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த 2 மாணவிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்து முதலிடம் பெற்ற 4 மாணவர், 4 மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, குழந்தைகள் காப்பகம், சேவை இல்லங்கள், அரசு குழந்தைகள் இல்லம், சிறுவர் இல்லம் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்து முதலிடம் பிடித்த 11 மாணவ, மாணவியருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

இந்த வகையில் ரூ.10.50 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா, ‘‘ நீங்கள் அனைவரும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்று இங்கு வந்துள்ளீர்கள். உங்களை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். நீங்கள் நாடே போற்றும் வகையில் மிக உயரிய இடத்தை அடைந்து வெற்றி காண வேண்டும். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்தினார்.

மாணவ, மாணவியரும் தங்களை பாராட்டி, பரிசு வழங்கி ஊக்குவித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்'' என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

சினிமா

3 mins ago

விளையாட்டு

17 mins ago

சினிமா

26 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்