தேர்தல் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்திடுக: முத்தரசன்

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்து அவசரத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்து வலுக்கட்டாயமாக இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதையும், அதற்க்கான காரண காரியங்களையும் அனைவரும் நன்கறிவார்கள்.

ஆளும் கட்சியின் அவசரத்தை ஏற்று, இடைத்தேர்தலை அறிவித்து இருப்பது தேர்தல் ஆணையமாகும்.தேர்தலை ஜனநாயகப் முறைப்படி நடத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆணையத்திற்குரியது. தேர்தல் நடத்தை விதிகளை போட்டியிடும் அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுத்திட வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்தை சார்ந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகளின் சார்பில் இரண்டு கட்சிகளே போட்டியிடுகின்றன. அதிமுகவின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகின்றார்.

இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சி.மகேந்திரன் களத்தில் உள்ளார். சுயேச்சை நண்பர்களும் போட்டியில் உள்ளனர். நேரடி போட்டி என்பது அதிமுகவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்தான் என்பது அனைவரும் அறியாத ஒன்றல்ல.

போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களது கட்சியினரும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி, ஜனநாயகத்தை நிலை நாட்டிட உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் அவ்வாறு நடப்பேன் என்று ஒவ்வாரு வேட்பாளரும் உறுதி மொழி அளித்தே தேர்தல் களத்தில் உள்ளனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு உறுதிமொழி படித்து கையெழுத்திட்ட வேட்பாளர்கள் யாராக இருப்பினும், எத்தகைய கட்சியை சார்ந்தவராக இருப்பினும், எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருப்பினும் அவர்கள் நடத்தை விதிகளை மீறி செயல்பட அனுமதி இல்லை,

மீறப்படும் போது அதனை தடுத்து நிறுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமையாகும். தேர்தல் ஆணையம் அவ்வாறு செயல்படாமல் பாரபட்சமாக செயல்படும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி தேர்தலை புறக்கணித்துள்ளன.

அவர்களது குற்றச் சாட்டை உறுதிப்படுத்தும் வகையில்தான் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகின்றது.ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திட ஆயிரக்கணக்கில் அவரது கட்சி தொண்டர்கள் ஆர்.கே.நகரை முற்றுகையிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மக்களுக்கான தலைமை செயலகத்தை காலி செய்து விட்டு, மாநில அமைச்சர்கள் 28 பேரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வாருவருக்கும் தனித்தனி வீடுகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.

48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர்கள், மாநகர தலைவர்கள், மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் என 10,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கனக்கான வாகனங்கள் தொகுதிக்குள் வட்டமிடுகின்றன.

மூன்று வாக்குச் சாவடிக்கு ஒரு அலுவலகம் வீதம் 150 வாக்குச் சாவடிகளுக்கும் 50க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. பிரச்சார பணியில் ஈடுபட்டிருப்போர், வாகனங்கள், அலுவலகங்கள் இவைகளுக்கான ஒரு நாள் செலவு எவ்வளவு ஆகும் என்பதனை தேர்தல் ஆணையம் கணக்கிட வேண்டும்.

சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் ரூ.28 லட்சத்திற்கு மேல் செலவிடக்கூடாது, என்று தேர்தல் விதி கூறுகின்றது. ஆனால், அதிமுக வேட்பாளர்க்கு இதுவரை எத்தனை கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பதனை தேர்தல் நடததும் அதிகாரிகளுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்க்கும் நன்கு தெரியும்.

இந்நாள் வரை எவ்வித நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாதது வியப்பளிக்கின்றது.இதுதான் ஜனநாயகமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் ஆளும் கட்சியின் அத்துமீறலை ஆணையம் தொடர்ந்து அனுமதிக்கப் போகின்றதா? அவ்வாறாயின் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும், அதன் விளைவு எதிர் விளைவை உருவாக்கும், அவ்வாறு உருவானால், அதற்கு முழு பொறுப்பும் தேர்தல் ஆணையமே ஆகும்.

ஜனநாயகப் நெறிப்படி தேர்தலை நடத்திட வேண்டும்.தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் வேட்பாளர் யாராக இருப்பினும் அவர்கள் மீது அச்சமின்றி நடவடிக்கை எடுக்கும் ஆற்றலும், துணிச்சலும் ஆணையத்திற்கு வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் தேர்தலை ரத்து செய்து, ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்