விழித்துக் கொள்ளுமா காஞ்சி நகராட்சி: மரங்களின்றி வெறிச்சோடும் கோயில் நகரம் - ஜூலையில் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கும் என ஆட்சியர் உறுதி

By செய்திப்பிரிவு

கோயில்களுக்கும், பட்டாடைகளுக்கும் புகழ் பெற்ற காஞ்சிபுரம் நகரத்தில் மரங்களை அரிதாகவே காணமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பழம் பாரம்பரியத்தையும், பெருமையையும் இழந்துவிடும் நிலைக்கு காஞ்சி நகரம் தள்ளப்பட்டுள்ளது.

காஞ்சியின் இயற்கை வளத்தை அதிகரிக்கும் திட்டங்களை நகராட்சி மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மாறாக, குடியிருப்புகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு குளம் இருந்தாலும், குளக்கரையை ஒட்டி மரங்களுக்கு பதிலாக குடியிருப்புகளே உள்ளன. மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பெயரளவுக்கு கூட நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு கைத்தறி நெசவுதொழிலாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் முத்துகுமார் கூறியதாவது:

20 ஆண்டுகளுக்கு முன்பு நெசவு தொழில் கொடி கட்டி பறந்தது. 4 தறிகள் வைத்திருப்பவர் பணக்காரர் என்று கருதப்பட்டார். இன்றைய நிலை அதுவல்ல. தற்போது வெகுவாக குறைந்துவிட்ட நெசவு தொழிலாளர்களும், பட்டு சேலை தயாரிப்பில் ஈடுபட முடிவதில்லை.

பாலாற்றிலும், சோற்று கஞ்சியிலும் நனைக்கப்படும் பட்டு, மரங்களின் இயற்கை சூழலில் உலர்த்தப்படும். இதனால், பட்டின் தரம் உயர்ந்து அதன் தயாரிப்பு முறைகள் சிறந்து விளங்கின. இன்று, பாலாற்றில் தண்ணீரும், பட்டுகளை உலர்த்த நிழல் தரும் மரங்களும் இல்லாமல் போய்விட்டன.

குளங்களுக்கு மழைநீரை கொண்டு செல்ல முறையான கால்வாய்கள் இல்லை. இதனால், குளங்கள் வறண்டே காணப் படுகின்றன. மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே நகராட்சி வலியுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில், செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 24 மரங்கள் நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டப்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டதால் 24 மரங்கள் தப்பின.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நகரப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரங்களை வெட்டவில்லை. ஆண்டுதோறும் புறவழி நெடுஞ் சாலைகளில் 400 மரக் கன்றுகள் நட்டு வருகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் இதுகுறித்து கூறியதாவது: வனத்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறைகளுடன் கலந்தாலோசனை நடத்தி மரக் கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கும். மரங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பள்ளிகள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும். பெரிய அளவிலான மரங்கள் வளர்க்க முடியாத முக்கிய சாலைகளில் புங்கம் மற்றும் வேம்பு ஆகிய மரங்களை வளர்க்க நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

23 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

31 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

37 mins ago

ஆன்மிகம்

47 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்